Published : 25 Oct 2018 02:21 PM
Last Updated : 25 Oct 2018 02:21 PM

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: கடந்து வந்த பாதை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை அதன் அரசியல் பின்னணி குறித்து ஒரு பார்வை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள் அதிமுகவின் ஆட்சி கவிழும் நிலைக்கு கொண்டுசென்றது. முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டு தான் முதல்வர் ஆகலாம் என்ற சசிகலாவின் முதல்வர் கனவு சிறைத்தண்டனையால் தடைபட எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

எந்த ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமியைக் கொண்டு வந்தார்களோ அவர்களாலேயே டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்டார். டெல்லி தயவு போதும் என முடிவு கட்டி ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்தனர். டிடிவி ஓரங்கட்டப்பட்டார். இணைந்த கைகள் பல்வேறு முடிவுகளை கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் எடுத்தனர்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவானவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் மனு அளிக்க அதில் இருவர் பின் வாங்கினர். இது குறித்து கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரில் சட்டப்பேரவைத் தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

எஸ்.டி.கே. ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சட்டப்பேரவை தலைவர் தனபால் 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் அன்றே வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தனி நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. இது தவிர சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தடை கேட்டு ஒரு வழக்கும் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோன்று நம்பிக்கை கோரும் தீர்மானம் எதுவும் நடத்தக்கூடாது என்றும் தடை விதித்தார். பின்னர் இவ்வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனிடையே ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது, அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி முன் நடந்த விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததும் கடந்த ஜனவரி 23-ம் தேதி, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ஒத்திவைத்தது. பின்னர் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது.

அன்று அளித்த தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும், சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளார், தகுதி நீக்கம் செல்லாது என இன்னொரு நீதிபதியான சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார். இதனிடையே மூன்றாவது நீதிபதி குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் நீதிபதி சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார். விரைவில் விசாரணை நடத்தி வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை புதிதாக தொடங்காமல் இருதரப்பு வாதங்களை மட்டும் எடுத்து அதன் அடிப்படையில் தீர்ப்பு வெளியாகும் என்பதால் அனைவரும் வாதத்தைக் கூர்ந்து கவனித்தனர். அரசுக்கு எதிராக நடக்கவில்லை, கொறடா உத்தரவு எதுவும் போடாத நிலையில் அவரது உத்தரவை மீறியதாக எப்படி கூற முடியும். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தானே மனு கொடுத்தோம் ஆட்சியின் மீதல்ல என தினகரன் தரப்பு வாதம் வைக்கப்பட்டது.

அரசின் தலைவர் முதல்வர், சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் அவர் மீது நம்பிக்கை இல்லை என செயல்படுவது கட்சியின் உத்தரவை மீறுவதாகும் என எதிர்தரப்பு வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் சார்பில் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதல்வர் தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கினை ஒட்டி மேலும் இரண்டு வழக்குகளும் இருந்ததால் பெரிதும் அனைவராலும் தீர்ப்பு எதிர்ப்பார்க்கப்பட்டது. இதையில் அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள், ரெய்டு என பல நெருக்கடி உருவானது. தீர்ப்பு செப்டம்பர் மாதமே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பு வெளியாகவில்லை.

பின்னர் நீதிபதி வெளிநாட்டுக்குச் சென்று கடந்த வாரம் சென்னை திரும்பினார். இதையடுத்து தீர்ப்பு விரைவில் வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்புக்கு ஆதரவாக வரும்பட்சத்தில் எம்.எல்.ஏக்களை வளைக்க ஆளும் தரப்பு முயலும் என்பதால் கடந்த மூன்று நாட்களாக அவர்கள் குற்றாலத்தில் தனியார் தங்கும் விடுதில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆளுங்கட்சி தரப்பிலும் சற்று நம்பிக்கை குறைவாக இருந்ததால் டிடிவி தவிர மற்றவர்கள் எங்களை நோக்கி வருவார்கள் ஆட்சிக்கு பங்கம் வராது என்றும், எம்.எல்.ஏக்கள் முதல்வரைத்தான் மாற்றச் சொன்னார்களே தவிர ஆட்சியை கவிழ்ப்போம் என்று சொல்லவில்லை என தம்பிதுரை, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென இன்று காலை தீர்ப்பு வெளியாகும் என பட்டியலிடப்பட்டது, இதையடுத்து பரபரப்பு தொற்றிக்கொண்டது. காலை சரியாக 10.30க்கு தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன் எடுத்த உடனேயே தகுதி நீக்கம் செல்லும், சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தாம் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

முன்னர் தீர்ப்பளித்த அமர்வின் தீர்ப்பின் எந்த சாராம்சத்தையும் தாம் பின்பற்றவில்லை, முழுக்க முழுக்க தான் நேரடியாக விசாரணை நடத்தியதிலிருந்தே இந்தத் தீர்ப்பு என்று தெரிவித்த நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பில் 3 முக்கிய அம்சங்களைத் தெரிவித்துள்ளார்.

3 அம்சங்கள்

1. அவரது நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட வாய்ப்பில்லை. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் உறுதி செய்யப்படுகிறது. அதில் சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. 18 சட்டப்பேரவை தொகுதிகளை காலியாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தலாம் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.

3. சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தடையையும் நீக்கம் செய்து வரும் காலத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தால் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு அதனை அனுமதிக்க வேண்டும்.

இனி தீர்ப்புக்கு பின்னர் இரண்டு விஷயங்கள் மட்டுமே நடக்கும். 1. மேல்முறையீடு, இதனால் தேர்தல் தள்ளிப்போகும். 2. உடனடியாக 18 பேரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவார்கள், அரசு நம்பிக்கை வாக்கு கோரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x