Published : 11 Aug 2014 06:20 PM
Last Updated : 11 Aug 2014 06:20 PM
ஆழியாற்றில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் இந்த தண்ணீரை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.
கோவை, பொள்ளாச்சி நகரங்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆழியாறு அணையில் இருந்து ஆனைமலை, மணக்கடவு வழியாக கேரளத்திற்கு நீர் செல்கிறது. அதாவது ஆழியாறு நகரில் அங்கலக்குறிச்சி கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையமும், சுத்திகரிப்பு நிலையமும் உள்ளன.
ஆனைமலை நீரேற்று நிலையம், அம்பராம்பாளையம் நீரேற்று நிலையம், குறிச்சி, குனியமுத்தூர் குடிநீர் திட்டத்திற்கு ஆத்துப் பொள்ளாச்சி நீரேற்று நிலையம் உள்ளிட்டவை இந்த ஆற்றை நம்பி உள்ளன. ஆனால் அணையில் இருந்து ஆற்றில் நீர் திறந்துவிடப்படும் பகுதியில் ஒரு கி.மீ. தொலைவிற்கு முதல் இரண்டு தடுப்பணைகள் வரை சுகாதாரக்கேடு அதிகரித்துள்ளது. சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டாலும், சுகாதாரக்கேடுகளால் குடிநீர் திட்டங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அணையில் இருந்தும், புனல் மின் நிலையத்தில் இருந்தும் நீர் வெளியேறும் இடத்தில் ஆழியார் நகர் ஆற்று நீர் சேகரிப்பு மற்றும் நீரேற்று நிலையம் உள்ளது. இதையொட்டி ஆற்றின் குறுக்காகச் செல்லும் வால்பாறை சாலை பாலத்தின் கீழ்பகுதி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. ஆற்றை ஒட்டி பன்றிகள் வளர்ப்பு, நாய்கள் வளர்ப்பு, கழிவு நீர் கலந்துவிடுவது, துணி துவைப்பது என சுகாதாரக் கேடுகள் நிறைந்துள்ளன.
இது குறித்து தி இந்து 'உங்கள் குரல்’ பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அங்குள்ள மக்களிடம் விசாரித்த போது, ஆற்றின் கரையோரத்தில் சுமார் 2000 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுகாதார நிலையம், பள்ளிக்கூடம் என அனைத்து வசதிகள் இருந்தாலும் அதை எல்லாம் விட வற்றாத வளமாக ஆறு உள்ளது.
ஆனால் இங்குள்ள சிலரால் ஆற்றின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கீழ் தொடங்கி, அகதிகள் முகாம் வரை 100-க்கும் அதிகமான பன்றிகள் உலவுகின்றன. கழிவுகளைத் தின்று, இனப்பெருக்கம் செய்யும் பன்றிகளைக் கட்டுப்படுத்த கோட்டூர் பேரூராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆற்றை ஒட்டியுள்ள மக்களுக்கு கழிவுநீர் கால்வாய்கள் முறையாக இல்லை. இதனால் அதுவும் ஆற்றுக்கே செல்கிறது. மேற்குப் பகுதியில் தடுப்பணையை ஒட்டி நீர் செல்லும் வழி முழுவதும் திறந்த வெளிக் கழிப்பிடம் தான்.
அணை திறக்கப்பட்டாலோ, மழை பெய்தாலோ சற்று சுத்தமாகும். மற்றபடி வருடம் முழுவதும் இதே நிலைதான். இருபுறமும் உள்ள நிலையைப் பார்த்தால் இந்த நீரை சுத்திகரித்துக் கொடுத்தாலும் குடிக்க முடியாது என்கின்றனர்.
சுற்றுலாத் தலம்
ஆழியாறு அணை எவ்வளவு பிரபலமோ, அதே நிலையை இந்த தடுப்பணையும் பெற்று வருகிறது. அணைக்கு வருபவர்கள் பலர் இந்த தடுப்பணையில் குளித்துவிட்டுத் தான் செல்கின்றனர். ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதி வரை பலர் குளிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தடுப்பணையின் முகப்பில் வாகன நிறுத்தம், திண்பண்ட வியாபாரம், இறங்கிச் செல்ல படிக்கட்டுக்கள் என ஏற்பாடுகள் ஏராளம். ஆனால் அதைவிடக் கொடுமை, தடுப்பணையையே குப்பைமேடாக மாற்றியுள்ளனர் அங்குள்ள சிலர்.
நோய்த்தொற்று அபாயம்
ஆற்றின் ஆரம்பம் என்பதால் இங்கு ஏற்படும் சுகாதாரக்கேடு, தண்ணீரைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. என்னதான் சுத்திகரித்தாலும் அழியாத நோய்க்கிருமிகள் இருக்கவே செய்யும்.
இதற்குப் பயந்து ஆற்றுப்புற காலனி மக்களில் பெரும்பகுதியினர் வீடுகளிலேயே மீண்டும் ஒருமுறை நீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகின்றனர். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் நீரை அப்படியே குடிக்கப் பயன்படுத்துவதில்லை என்கின்றனர். அதற்கு சான்றாக நீர் மஞ்சள் தன்மையுடன் இருப்பதையும் நமக்கு காட்டினர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் நீராதாரம் பாதிக்கப்படுவது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.கனகராஜிடம் கேட்டபோது, ஆழியாறு முழுவதும் வருவாய், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடங்களே உள்ளன.
ஒரு இடத்தை கேட்டுப்பெற்று பொதுக்கழிப்பிடம் கட்டக் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்துகிறேன். அதே சமயம், சொந்த வீடு உள்ளவர்கள் கழிப்பிடம் கட்ட சர்வே நடந்து வருகிறது. இதன் மூலம் ஒரு கட்டுப்பாடு ஏற்படும். தவிர பன்றி வளர்ப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்து தடுத்து வருகிறோம். அரசியல் காழ்புணர்ச்சியால் இதுபோன்ற புகார்கள் வரும். ஆனால் அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு இந்த புகார் இதுவரை வரவில்லை. உண்மையிலேயே சுகாதாரக்கேடு காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT