Last Updated : 11 Oct, 2018 01:18 PM

 

Published : 11 Oct 2018 01:18 PM
Last Updated : 11 Oct 2018 01:18 PM

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவைத் தொடங்கி வைத்தார் ஆளுநர்

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா இன்று தொடங்கியது.

வற்றாத ஜீவநதியான நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 64 தீர்த்தக்கட்டங்கள், 143 படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பாபநாசத்தில் நடந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு புஷ்கர விழாவைத் தொடங்கி வைத்து விழா மலரையும் வெளியிட்டார்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா இன்று தொடங்கியது. இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக பாபநாசம் முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பக்தர்கள் புனித நீராடுவதற்கு 64 தீர்த்தக்கட்டம் மற்றும் 143 படித்துறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாபநாசத்தில் அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி விழா மேடைக்கு வந்த அவர் தாமிரபரணி மஹா புஷ்கரம் -2018 தீர்த்தமாடுதல் பெருவிழா மலரை வெளியிட்டு தாமிரபரணி புஷ்கர விழாவைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் நெல்லை வரும் அவர் மாலை 5.30 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்தத்தில் ஆரத்தி நிகழ்வு மற்றும் கோ பூஜையில் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி அருகே உள்ள திருப்படைமருதூர் புஷ்கர விழாவிலும் கலந்து கொள்கிறார்.

புஷ்கர விழாவினையொட்டி அனைத்து படித்துறைகள் மற்றும் தீர்த்தக்கட்டங்களில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விழா தொடங்கியதைத் தொடர்ந்து பாபநாசம், திருப்புடைமருதூர், நெல்லை ஜடாயு தீர்தம் உள்ளிட்ட அனைத்து தீர்த்தக்கட்டங்களிலும் புனித நீராடல் தொடங்கியது, பொதுமக்கள், பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்து வருகின்றனர்.

மேலும் பாதுகாப்புப் பணியில் மாநகரத்தில் ஆயிரத்தில் 700 போலீஸாரும் , மாவட்ட பகுதியில் ஆயிரத்து 500 பேர் என மூவாயிரத்து 200 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருச்சி, வேலூர், அரியலூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் இருந்து போலீஸார் நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதிகம் பக்தர்கள் கூடும் படித்துறைகளில் கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் 200 பேர் பாதுகாப்பு பணியிலும் பாபநாசம் , திருப்புடைமருதூர், தைப்பூசமண்டபம், குறுக்குத்துறை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் படகுகளுடன் தீயணைப்பு வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x