Last Updated : 03 Oct, 2018 05:58 PM

 

Published : 03 Oct 2018 05:58 PM
Last Updated : 03 Oct 2018 05:58 PM

கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி புதுச்சேரி சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏ மனு

அரசு விழாவில் பேசும்போது மைக் இணைப்பைத் துண்டித்து, வெளியேறக் கூறிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரியிலுள்ள கம்பன் கலையரங்கத்தில் காந்தி ஜெயந்தியன்று (செவ்வாய்க்கிழமை) யூனியன் பிரதேசமான புதுச்சேரி மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொது மேடையில் பேசிக்கொண்டிருந்த அதிமுக எம்எல்ஏ அன்பழகனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால் பேச்சை நிறுத்துமாறு துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தினார். இருப்பினும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் அருகில் சென்று ஆளுநர் கிரண்பேடி மைக் இணைப்பைத் துண்டிக்க வலியுறுத்தினார். இதனால் கோபமடைந்த அன்பழகன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவை அவமதிக்கும் விதமாகச் செயல்படுவதாகக் கூறி மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் பொதுமேடையில் சலசலப்பு ஏற்பட்டு அன்பழகனை மேடையை விட்டு வெளியே செல்லுமாறு ஆளுநர் கிரண்பேடி கூறினார். இதனை அடுத்து ஆளுநரை வெளியே செல்லுமாறு அன்பழகன் கூறினார். அதைத்தொடர்ந்து பொது மேடையிலிருந்து அன்பழகன் வெளியேறினார்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) சபாநாயகர் வைத்திலிங்கத்தை அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசனா, பாஸ்கர் ஆகிய நால்வரும் சட்டப்பேரவையிலுள்ள அவரது அறையில் சந்தித்தனர். அப்போது அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எம்எல்ஏ அன்பழகன் அளித்த புகார் மனு விவரம்:

“மக்களால் தேர்வான அதிமுக எம்எல்ஏவான என்னை அரசு விழா மேடையில் பேசவிடாமல் ஆளுநர் கிரண்பேடி தடுத்தார். விழா மேடையில் இருந்து வெளியேறக் கூறினார். ஆளுநர் என்ற அதிகாரத்தில் எம்எல்ஏவின் உரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டார். ஆளுநர் நடவடிக்கை என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தும் செயல். மாநில துணைநிலை ஆளுநராக இருந்துகொண்டு மக்கள் பிரதிநிதியைத் திட்டமிட்டு களங்கப்படுத்திய ஆளுநர் கிரண்பேடி மீது சட்டப்பேரவை உரிமை மீறல் விதியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x