Last Updated : 09 Oct, 2018 02:07 PM

 

Published : 09 Oct 2018 02:07 PM
Last Updated : 09 Oct 2018 02:07 PM

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது தவறாக தெரியவில்லை: டிடிவி தினகரன் பேட்டி

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டது தனக்கு தவறாக தெரியவில்லை என, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “ஆதாரமின்றி அவதூறாக செய்தி எழுதினால் கைதுதான் ஆக வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகைகள் உண்மை செய்தியை எழுதினால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆதாரமின்றி தாங்க முடியாத அளவுக்கு விமர்சனங்கள் எழுதும்போது யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். எனவே நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டது எனக்கு தவறாக தெரியவில்லை.

பொய் வழக்கு போடும் போது காவல்துறையை எதிர்த்து பேசுகிறோம் அல்லவா.

பத்திரிகைகள் தங்களது அதிகாரத்தை, உரிமையை பிறர் மீது அவதூறு பரப்ப பயன்படுத்தக் கூடாது. நக்கீரன் ஆசிரியர் கோபால் என்னைப் பற்றி அவதூறாக எழுதி 2009 இல் நான் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவருக்கு ஆறு மாதம் தண்டனை வாங்கிக் கொடுத்தேன். அவர் மீது தனிப்பட்ட விரோதம் இல்லை.

ஒரு பத்திரிக்கையாளர் அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்காகவே வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். நான் நினைத்தால் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியும். ஆனால் எனக்கு அந்த நோக்கம் கிடையாது. அவர் தவறை சுட்டிக் காட்டவே வழக்கு தொடர்ந்தேன்.

களங்கம் ஏற்படுத்தினால் கற்பிக்கப்பட்டால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். அதுபோலத்தான் ஆளுநர் செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

பாஜகவுடன் நாங்கள் கூட்டணி சேர முடியாது. இதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் மக்களின் எண்ணம் என்னவென்று எல்லாருக்கும் தெரியும். குறிப்பாக அமமுக கொள்கைக்கும் பாஜக கொள்கைக்கும் ஒத்துவராது” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x