Published : 31 Oct 2018 05:47 PM
Last Updated : 31 Oct 2018 05:47 PM
'சர்கார்' உள்ளிட்ட படங்கள் தீபாவளி உள்ளிட்ட நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலை டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக திரையுலகினர் சட்டமீறலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் ஆர்வம், ரசிகரின் தீவிர ஈர்ப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் திரையுலகினர் படத்தில் நேர்மையைப் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் நடைமுறையில் வரி ஏய்ப்பு, கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை, ஜிஎஸ்டிக்கும் அதிகமாக கூடுதல் வரியை பொதுமக்கள் தலையில் கட்டுவது, அனுமதிக்கப்பட்ட காட்சிகளைத் தாண்டி கூடுதல் காட்சிகளை ஓட்டுவது என முறைகேடுகள் தொடர்கின்றன.
இது தவிர திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என செயற்கையாக கட்டுப்பாட்டை கொண்டு வந்து இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களை விற்பது, பார்க்கிங் கட்டணம் என்கிற பெயரில் ஒரு மணிநேரத்திற்கு இவ்வளவு என வசூலிப்பது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது என்பது வாடிக்கையான விஷயமாக மாறி வருகிறது.
சமீபகாலமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்த வழக்கும், கூடுதல் காட்சிகள் குறித்த வழக்கும் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தது. அதில் சில விசாரணையில் உள்ளது. சில விஷயங்களில் உத்தரவு போடப்பட்டுள்ளது. நேற்று உயர் நீதிமன்றத்தில் பண்டிகை, விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிடத் தடை விதிக்கப்பட்டது.
வழக்கை தொடுத்த சமூக ஆர்வலர் தேவராஜை 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:
நேற்று ஒரு வழக்கில் உத்தரவைப் பெற்றுள்ளீர்கள். இதில் யார் நடவடிக்கை எடுப்பது?
சென்னைக்கு காவல்துறை. அவர்கள்தான் சட்டப்படி அனுமதி கொடுக்கும் தகுதி பெற்றவர்கள், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள்தான் அதற்கு அனுமதி அளிக்கும் தகுதி பெற்றவர்கள். அவர்கள்தான் கண்காணிக்க வேண்டும். இதில் இன்னொரு பிரச்சினை உள்ளது. 5 காட்சிகள் அனுமதி, 6 வது காட்சி போடுகிறார்கள் என்றால் அது அனுமதிக்கப்படாத காட்சி.
இந்தப் பிரச்சினை காரணமாக ஆன்லைனில் கூடுதல் காட்சியை புக் பண்ண மாட்டார்கள். நேரடியாக 6-வது காட்சி 7-வது காட்சி என்று அங்கேயே போட்டு டிக்கெட்டுகளை விற்பார்கள். ஆன்லைனில் போட்டால்தானே கண்காணிப்பீர்கள் என்று ஆன்லைனில் போடாமலே காட்சிகளை நடத்துவார்கள். இதுபோன்ற விஷயமும் நடக்கும்.
தீபாவளி ரிலீஸ் படங்களில் அனுமதி இல்லாமல் கூடுதல் காட்சிகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறீர்கள்?
தற்போது வெளிவரும் 'சர்கார்' படத்தை எடுத்துக்கொண்டால்கூட கூடுதல் காட்சிகள், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது என்று வழக்குப் போட முடிவு செய்து ஆவணங்களை தயார் செய்துவிட்டேன். ஆனால் அது வழக்காக போடத் தொடர்ந்து நீதிமன்றம் விடுமுறை வருவதால் இப்போதைக்கு வழக்கு போட முடியாது.
கூடுதல் காட்சி போட்டு, கூடுதல் கட்டணம் விதித்தால்தான் அப்புறம் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
கூடுதல் கட்டணம், வசூல் பிரச்சினை குறித்து எப்போதிருந்து நீங்கள் வழக்கு தொடுத்து வருகிறீர்கள்?
இந்தப் பிரச்சினை தொடர்ந்து நடந்தாலும் 2010-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'மன்மதன் அம்பு' படத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டபோது நான் வழக்கு தொடர்ந்தேன். வெளி உலகுக்கு கொண்டு வந்தது அப்போதுதான். அன்றிலிருந்து இன்றுவரை 8 ஆண்டுகள் இந்தப் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அரசுத் தரப்பிலிருந்து ஒரு சின்ன நடவடிக்கை கூட இதுவரை இல்லை.
இந்த 9 ஆண்டுகளில் பல படங்களுக்கு நான் வழக்கு போட்டேன் இந்த 9 வருடங்களில் அரசுக்கு இது தெரியாமலா இருக்கிறது?
கபாலி படம் வந்த நேரத்தில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுபோல் உள்ளதே?
ஆமாம் அந்த நேரத்தில் முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் கொடுத்தார்கள். அப்போது போட்டோம். இப்போது தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த முறை 2-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஆன்லைனில் கொடுக்க ஆரம்பிப்பார்கள். விடுமுறை நாளில் நாம் எப்படி வழக்கு போட முடியும்.
டிக்கெட் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று நாம் எப்படி விடுமுறை நாளில் வழக்கு போட முடியும். முன்னதாக வழக்கு போட்டால் யூகத்தின் அடிப்படையில் தொடுக்கப்படும் வழக்கை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவிக்கும்.
நாம் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகம் விற்கிறார்கள் என்று ஆதாரத்துடன் காட்டவேண்டும்.
இதுவரை நீங்கள் போட்ட வழக்குகள் ஒன்றில்கூட முடிவு வரவில்லையே?
அப்படி எல்லாம் இல்லை, காத்திருக்கவேண்டும். நீதி இன்று கிடைக்காவிட்டாலும் நாளை கண்டிப்பாக கிடைக்கும். இப்போதுகூட கூடுதல் காட்சிகள் திரையிடும் வழக்கில் இதே விவகாரத்தை பல முறை வழக்கில் தெரிவித்துள்ளேன். ஆனால் இந்தமுறை கூடுதல் காட்சி விவகாரத்தை மட்டும் தனியாக எடுத்து வழக்கு தொடர்ந்தேன். அதற்கு உத்தரவு கிடைத்துள்ளது அல்லவா?
ஒரு ரசிகன் மனோபாவத்திலிருந்து கேட்கிறேன். கூடுதல் காட்சிகள் போட்டால் எங்களுக்குப் பார்க்க கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா? அதில் என்ன தவறு?
அரசாங்கம் சட்டப்படி அனுமதிக்காத காட்சிக்கு அரசாங்கம் எப்படி பாதுகாப்பு அளிக்கும், கூடுதல் காட்சிகள் என்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதை மீறி திரையிடுவது. அதில் நேரம் கணக்கெல்லாம் கிடையாது, அப்படி கூடுதல் காட்சிகளை அதிகாலை 5 மணிக்கு போடுகிறார்கள் அரசு அங்கீகரிக்காத காட்சிக்கு யார் வந்து பாதுகாப்பு தருவது?
இது மட்டும்தான் காரணமா?
அது ஒரு காரணம், இதுதவிர இவர்களுக்கு ரெகுலர் காட்சிகளுக்கு அரசாங்கத்தின் மானியம் மற்ற சலுகைகள் உள்ளன. இதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஹெல்மெட் போடவேண்டும் என்று நீதிமன்றம் ஏன் பிரஷர் கொடுக்கிறார்கள், சட்டம் போட்டுள்ளோம் அதை மதியுங்கள் என்கிறார்கள்.
இவர்கள் அதுபோன்ற விவகாரங்களில் ஏன் சட்டத்தை மதிக்க மறுக்கிறார்கள். கோடிக்கணக்கில் வருமானம் சம்பாதிப்பவர்கள் ஏன் மதிப்பதில்லை. அரசு என்ன சொல்கிறது? அனுமதிக்கப்பட்ட காட்சிகள் திங்கள் முதல் வெள்ளிவரை 4 காட்சிகள் விடுமுறை நாட்களில் அனுமதி பெற்று 5 காட்சிகள் போடுங்கள் என்கிறார்கள்.
தீபாவளிக்கு சிறப்புக்காட்சியாக 5 காட்சிகள் ஓட்டலாம். அதுவும் காலை 9 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இவர்கள் காலை 7 மணி 6 மணி என இப்போது அதிகாலை 4 மணிக்கெல்லாம் ஷோ போட ஆரம்பித்துவிட்டார்கள்.இதைக் கண்காணிக்க வேண்டியவர்கள் கண்டுக்கொள்வதில்லை. எங்காவது ஒரு இடத்தில் பிரச்சினை ஏற்படும்போதுதான் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
ஜிஎஸ்டி தவிர கூடுதலாக வரியை டிக்கெட்டில் வைத்து விற்கும் விவகாரம் என்ன ஆயிற்று?
டிக்கெட்டில் ஜிஎஸ்டி 18 சதவிகிதம். 120 ரூபாய் வரை 18 சதவிகிதம், அதற்கு கீழ் சென்றால் குறிப்பிட்ட சதவிகிதம் ஜிஎஸ்டி போடுகிறார்கள். இவர்கள் கூடுதலாக ஒரு விஷயத்தைச் செய்கிறார்கள். மறைக்கப்பட்ட ஒரு உண்மை இருக்கிறது. அனைவரும் பொருளை விற்கும்போது ஜிஎஸ்டி வரி மட்டுமே வாங்கவேண்டும். அதற்காகத்தான் ஜிஎஸ்டி வரியே கொண்டுவரப்பட்டது.
ஆனால் இவர்கள் மட்டும்தான் கூடுதல் வரியைச் சேர்த்து வாங்குகிறார்கள். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனே ஒரு தடவை இதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். சினிமா தியேட்டர்கள் ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்க வேண்டும், ஆனால் கூடுதல் வரியை டிக்கெட்டில் சேர்த்து வாங்குகின்றனர் என்று ஒரு தடவை குறிப்பிட்டார்.
அதுதான் உண்மை, அடுத்து அந்த விவகாரத்தைத்தான் கையில் எடுக்க உள்ளோம். ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதன் நோக்கமே அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு ஒரே வரியாக ஜிஎஸ்டி மட்டும் வசூலிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். ஆனால் இவர்களுக்கு மட்டும் டிக்கெட் கட்டணத்தில் ஜிஎஸ்டி மற்றும் லோக்கல் டாக்ஸ் என போட்டு வசூலிக்கிறார்கள்.
உதாரணமாக, ஒரு டிக்கெட்டுக்கு விலை மற்றும் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 150 ரூபாய் என்றால் இவர்கள் லோக்கல் டாக்ஸ் என்று போட்டு கூடுதலாக 35 ரூபாய் வசூலிக்கிறார்கள். இது பொதுமக்கள் பணம்தானே. இதை அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறது.
இதைக் கண்காணிக்க ஜிஎஸ்டி அதிகாரிகள் இருந்து என்ன பயன் என்று எனக்குத்தெரியவில்லை. இதுகுறித்து ஆர்டிஐயில் கேட்டால் பதில் கொடுக்க மறுக்கிறார்கள். அடுத்து இதை வைத்து வழக்கு தொடுக்க உள்ளேன்.
அடுத்து உங்கள் நடவடிக்கை என்ன?
அடுத்து 'சர்கார்' உள்ளிட்ட படங்களில் மேற்சொன்ன விதிகள் மீறப்படுகிறதா என்று கண்காணிப்பேன். கண்டிப்பாக புகார் அளிப்பேன். நடவடிக்கை இல்லாவிட்டால் வழக்கு தொடுப்பேன். ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலும், கூடுதல் காட்சி அனுமதி இன்றி ஓட்டினாலும் கண்டிப்பாக வழக்கு போடுவேன். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம் அந்த ஆதாரத்துடன் வழக்கு தொடுப்பேன்.
இவ்வாறு தேவராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT