Published : 27 Oct 2018 03:48 PM
Last Updated : 27 Oct 2018 03:48 PM

அடுத்து தகுதி நீக்கத்துக்கு தயாராக உள்ள 4 எம்.எல்.ஏக்கள்: விரைவில் நடவடிக்கை?

தகுதி நீக்க வழக்கில் ஆளுங்கட்சித்தரப்புக்கு ஆதரவாக உயர் நீதிமன்ற வழக்கு வந்ததை அடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு அதிமுக தயாராகி வருகிறது. டிடிவிக்கு ஆதரவாக செயல்படும் கருணாஸ் உள்ளிட்ட 4 பேர் மீதும் நடவடிக்கை பாய உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஓபிஎஸ் ஒதுக்கப்பட்டு, எடப்பாடி முதல்வராக்கப்பட்டு, பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் இணைந்து டிடிவியை ஓரங்கட்டியது என அதிமுகவிற்குள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் வந்தது.

ஆளுங்கட்சிக்கு எதிராக ஒருவர் செயல்படும்போது மக்கள் செல்வாக்கு இருந்தாலும் கட்சியிலிருந்து யாரும் ஆதரவாக வரமாட்டார்கள் என்பதற்கு ஓபிஎஸ் உதாரணம். 11 எம்.எல்.ஏக்களுடன் அவரது ஆதரவாளர் வட்டம் சுருங்கிப்போனது.

டிடிவி தினகரனுக்கு பெரிய ஆதரவு உள்ளதுபோல் காண்பிக்கப்பட்டாலும் கருணாசுடன் சேர்த்து 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. கட்சி அதிகாரத்தில் உள்ளதால் இப்போதைக்கு தனது ஆதரவை பரிசீலிக்க முடியாது தேர்தல் நேரத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்பது டிடிவி தரப்பின் வாதம். அது ஓரளவுக்கு உண்மை என்றே கூறலாம்.

ஜெயலலிதா இருந்தபோது ஒரே மாதத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி 1.5 கோடி தொண்டர்களை புதுப்பிப்பார்கள், ஆனால் பல மாதங்களாக உறுப்பினர் சேர்ப்பு நடத்தியும் 65 லட்சத்தை தாண்டவில்லை என கருத்து ஒருபக்கம் வைக்கப்படுகிறது.

மற்றொருபுறம் 1.10 கோடி உறுப்பினர்களை சேர்த்து விட்டதாகவும் விரைவில் 2 கோடியாக உயர்த்துவோம் என சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவித்தனர்.

ஆனால் 1.10 கோடியை பிடிக்கவே உன்னைப்பிடி என்னைப்பிடி என்று ஓடவேண்டியுள்ளது இதில் 2 கோடி எங்கே என்கின்றனர் அதிமுக தரப்பில் சிலர். இந்நிலையில் ஆட்சிக்கு பிரச்சினை வராத வகையில் ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு வந்துள்ளது ஆளுங்கட்சித்தரப்பில் உற்சாகத்தை தந்துள்ளது. டிடிவி தினகரன் தரப்பில் ஏற்பட்டுள்ள உற்சாகமின்மையை ஆளுங்கட்சி எப்படி பயன்படுத்தப் போகிறது என்பது பின்னர் தெரியவரும்.

ஆனால் தகுதி நீக்க வழக்கில் அடுத்து மேல்முறியீட்டிற்கு செல்ல 18 பேரும் முடிவெடுத்துள்ளது ஆளுங்கட்சிக்கு உற்சாகம் அளிக்கும் செயலாக அமைந்துள்ளது. இருக்கிற எம்.எல்.ஏக்களை வைத்து பிரச்சினை இல்லாமல் ஆட்சியை நகர்த்தலாம் என்பதே அது. இன்னொருபுறம் இந்த வெற்றியோடு நின்றுவிடாமல் தீர்ப்பு தந்த உற்சாகத்தில் அடுத்த நகர்வுக்கு ஆளும் தரப்பு தயாராகியுள்ளதாக அதிமுக வட்டாரதகவல்கள் தெரிவிக்கிறது.

சட்டப்பேரவைத்தலைவர் தீர்ப்பில் தலையிட முடியாது சரியான நடவடிக்கை என்று உயர் நீதிமன்றம் அறிவித்ததால் அடுத்த நகர்வாக அதிமுகவுக்குள் இருந்துக்கொண்டே தினகரன் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு மற்றும் அதிமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்த இரட்டை இலை சின்னத்தில் நின்ற கருணாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் சென்றுள்ளது.

இதில் கருணாஸ் சபாநாயகருக்கு எதிராக அளித்துள்ள நோட்டீஸும் அவர்மீது நடவடிக்கை எடுப்பதை தள்ளிப்போகச்செய்யும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இதில் அவர்கள் மீது விரைவில் தகுதி நீக்கம் வரலாம். இதனால் மேலும் 4 பேர் எம்.எல்.ஏ பதவிக்கும் விரைவில் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த நடவடிக்கை பாயும் என தெரிகிறது. இதன் மூலம் மேலும் 4 பேர் குறைவது அதிமுகவுக்கு சாதகமாகவே அமையும்.

இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடினால் என்ன நடக்கும் என்பதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரும் நோட்டீஸ் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடினால், ஏற்கனவே 18 பேருக்கு ஏற்பட்ட நிலைதான் அவர்களுக்கும் வரும் என கூறியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x