Published : 12 Oct 2018 03:23 PM
Last Updated : 12 Oct 2018 03:23 PM
தேவையில்லாத சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்காதீர்கள் என்று இளம் மருத்துவர்களிடம் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தினார்.
புதுச்சேரியில் இன்று ஜிப்மர் 9-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்றார். இவ்விழாவில் 466 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி அவர் பேசியதாவது:
“நாட்டில் முதல் பிரதமரின் பெயரில் உருவான இக்கல்லூரியின் பெயரை சுருக்கி ஜிப்மராக்கியுள்ளோம். இதேபோல் தான் பல சாலைகளின் பெயர்களும் சுருக்கப்படுகிறது. எந்நோக்கத்துக்காக தலைவர்களின் பெயர்களை சூட்டுகிறோமோ அந்நிலை மாறிவிடுகிறது. தலைவர்களின் பெயர்களுடைய சாலைகள், நிறுவனங்கள் முழு பெயரில் இருப்பது அவசியம்.
வாழ்வில் பெற்றோர், தாய்மொழி, தாய்நாடு, ஆசிரியர் ஆகியோரை மறக்கக்கூடாது. வீடுகளில் தாய்மொழியில் உரையாடுங்கள். தாய்மொழி நம் கண்ணாகவும், பிற மொழிகள் அதன் மேல் அணியும் கண்ணாடிகளாகவுமே இருத்தல் அவசியம். தாய் மொழி தவிர்த்தால் கண்ணாடி அணிந்தும் பயனில்லை.
தேவையில்லாத சோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்காதீர்கள். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை புன்னகையுடன் அணுகுங்கள். வெறும் ஆய்வக முடிவுகளை கொண்டு அவர்களை அணுகாமல் சிறிது நேரமாவது ஆறுதலுடன் பேசி மனதளவில் தெம்பூட்டி மருந்துகளை பரிந்துரையுங்கள்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,நாடு முழுவதும் 13 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். 70 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்படும். 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, ஜிப்மர் தலைவர் மஹாராஜ் கிஷன் பான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இ்வ்விழாவில் 466 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பெற்றோர்களுக்கு விழா அரங்கு செல்ல அனுமதியில்லை. அவர்களுக்கு ஜிப்மரில் எஸ்.எஸ்.பி கட்டட 3-வது மாடியிலுள்ள கருத்தரங்கு அறையில் பட்டமளிப்பு விழா நிகழ்வு நேரடி ஒளிபரப்பை பார்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT