Published : 14 Oct 2018 12:20 AM
Last Updated : 14 Oct 2018 12:20 AM
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் 3 சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளின் வீட்டுக்குச் சென்று அவரிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது, புன்னைவன நாதர் சிலை, ராகு மற்றும் கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாகக் கூறி அந்தச் சிலைகள் மாற்றப்பட்டு, புதிய சிலைகள் வைக்கப்பட்டன.
வெளிநாட்டுக்கு கடத்தல்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்தப் பணிகள் செய்யப்பட்டன. ஆனால் கோயில் சிலைகளை மாற்றுவதற்கு அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் மூன்று சிலைகளும் மாற்றப்பட்டன. இப்படி மாற்றப்படும் சிலைகள் ஆகம விதிப்படி பூஜை செய்து,மண்ணில் புதைத்து இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 3 சிலைகளையும் அதிகாரிகள் துணையுடன் வெளிநாட்டுக்குக் கடத்தி, பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வந்த புகாரின்பேரில் அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கோயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கோயில் சிலைகள் காணாமல் போய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிலைகள் மாயமானது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி குமார் தலைமையிலான 5 போலீஸார் சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு நடத்தி, கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிலைகள் மாயமானது குறித்து 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பொன்.மாணிக்கவேல் ஆய்வு
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த 11-ம் தேதி மாலையில் திடீரென மயிலாப்பூர் கோயிலில் ஆய்வு செய்தனர். புன்னைவன நாதர் சிலை, ராகுமற்றும் கேது சிலைகள் இருந்தஇடத்தில் நீண்ட நேரம் ஆய்வு நடத்தினர். அங்கிருந்த கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்களிடமும் விசாரணை நடத்தினர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகளிடம் அவரது வீட்டில் வைத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
சிலைகள் மாயமான 2004-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் திருமகள். அவர் தற்போது இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக இருக்கிறார். பெரம்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை 10 மணி அளவில் பெரம்பூரில் உள்ள திருமகளின் வீட்டுக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 3 பேர் சென்று, சிலைகள் மாயமானது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT