Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM
விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலமாக பழச்சாறு கடை நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் மின்சார தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையில், சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து பழச்சாறு கடை நடத்தும் அந்த இளைஞரின் பெயர் ராமதாஸ் (32). அவருடைய வித்தியாசமான முயற்சி குறித்து கேட்பதற்காக சென்றபோது, வாடிக்கையாளர் ஒருவருக்கு அத்திப் பழச்சாறை மிக்ஸியில் அடித்து டம்ளரில் ஊற்றி கொடுத்து விட்டு, திராட்சை பழச்சாறு தயாரிக்க தயாரானார். அவருடைய பணிகளுக்கு இடையே, ‘தி இந்து’வுக்காக அவர் அளித்த பேட்டி:
விழுப்புரம் அருகே உள்ள வெள்ளையாம்பட்டு கிராமம் எனது சொந்த ஊர். என் மனைவி சசிகலா, மகள் தர்ஷினி (6) மகன்கள் அஸ்வின் (3), விஷால் (1). குடும்ப சூழ்நிலை காரணமாக 10ம் வகுப்புக்கு மேல் படிக்க வசதி இல்லை. எனவே, பிழைப்பு தேடி புதுச்சேரி சென்றேன். அங்கு, கிழக்கு கடற்கரை சாலையில் தள்ளுவண்டியில் கடை அமைத்து பழச்சாறு வியாபாரம் செய்து வந்தேன். கடந்த மே மாதம் புதுச்சேரியில் உள்ள Phocos என்ற தனியார் நிறுவனத்தை அணுகி, எனது தள்ளுவண்டியில் சூரிய ஒளி மின்சார சாதனங்களை அமைத்து தர முடியுமா? என கேட்டபோது அவர்கள் திகைத்தனர். எனினும், ரூ.1.40 லட்சம் செலவாகும் என்றனர். அதை சுலப தவணையில் திருப்பி செலுத்துவதாக நான் ஏற்றுக் கொண்டேன். அதற்கு அவர்களும் சம்மதித்து எனது தள்ளுவண்டியின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி தந்தனர். வண்டிக்குள் சூரிய மின்சார உற்பத்திக்கு தேவையான உபகரணங்களையும் அவர்கள் அமைத்து கொடுத்தனர்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அருகே நடைபாதையில் பழச்சாறு கடை நடத்தி வந்தேன். அங்கு தொடர்ந்து கடையை நடத்துவதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. அதனால், சில நாட்களுக்கு முன் விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே சாலையோரத்தில் கடையை மாற்றினேன். மேலும், இங்குள்ள நடைபாதை வியாபாரிகள் சங்கத்திலும் இணைந்துள்ளேன். தற்
போது மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் அரசையே அனைவரும் நம்பி இருப்பது தவறாக தோன்றியது. மேலும், முதல்வரின் பசுமை வீடு திட்டத்தில் சோலார் பவர் பொருத்துவதை அறிந்த நான், ‘தள்ளுவண்டியிலும் இதை ஏன் செய்யக் கூடாது’ என யோசித்தேன். அதன் விளைவாக, Phocos நிறுவனத்தின் மூலமாக எனது தள்ளுவண்டி கடையானது சூரிய மின்சக்தி கடையாக மாறி விட்டது.
5 அடி அகலம், 10 அடி நீளம் என 50 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் solar panel மூலம் 1000 watts-க்கு உட்பட்ட மிக்ஸி, சிறிய அளவிலான பிரீசர் (Freezer), மின் விளக்கு போன்ற கடைக்கு தேவையான சாதனங்கள் இயங்குகின்றன.
இதனால், பேட்டரிகள் தேவையில்லை. டீசல் ஜெனரேட்டர் தேவையில்லை. சோலார் பேனல்களுக்கு 25 வருட உத்தரவாதம் இருப்பதால், முதல் முறை செலவு செய்தால் 25 வருடம் வரை செலவு செய்யத் தேவையில்லை. மற்ற கடைகளில் தினமும் 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மின்சார செலவு ஏற்படும். எனக்கு அந்த பிரச்சினை இல்லை. சோலார் பேனலுடன் கூடிய கடையை வடிவமைக்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆனது.
விரைவில் நான் செலவழித்த பணம் கிடைத்து விடும். அத்துடன், சுற்றுச் சூழலை மாசுப்படுத்தவில்லை என்ற மன நிம்மதியும் எனக்கு கிடைக்கும்.
இவ்வாறு கூறுகிறார், ராமதாஸ்.
சூரிய மின்சக்தி சாதனங்களை பொருத்திக் கொடுத்த புதுச்சேரியை சேர்ந்த Phocos நிறுவனத்தின் விற்பனை மேலாளர் பிரதாப்பை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது, ‘புதுச்சேரியில் கடைகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தி கொடுத்திருக்கிறோம். தள்ளு
வண்டியில் சூரிய மின்சக்தி உபகரணங்களை பொருத்தியது இதுவே முதல்முறை’ என்றார்.ராமதாஸ் போல அனைவரும் வித்தியாசமாக யோசிக்க தொடங்கினால் மின் தட்டுப்பாடு என்ற நிலைமை ஏற்படாது. உதாரணமாக, விழுப்புரம் போன்ற ஒரு நகரில் உள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்திலும் இதுபோன்று அமைத்தால் எவ்வளவு மின்சாரமும், டீசலும் மிச்சமாகும் என நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT