Published : 20 Oct 2018 04:46 PM
Last Updated : 20 Oct 2018 04:46 PM
வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன். ஆனால் அதற்கான ஆதாரமான பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் வழக்கு தொடுப்பேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
மீ டூ விவகாரத்தை ஒட்டி தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்திதத்து. இதில் திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
வைரமுத்து விவகாரத்தில் வேறொரு அரசியல் உள்ளது என்கிறார்கள், அதன் பின்னர் திருமணத்துக்கு அழைத்து காலில் ஏன் விழுந்தீர்கள் என்று கேள்வி முன் வைக்கப்படுகிறது?
2005, 06 க்கு பிறகு அவரது புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அழைத்தார். அதில் முதல்வர் சிறப்பு விருந்தினர் என்பதால் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் சென்றேன்.
எனது திருமணத்துக்கு வைரமுத்துவுக்கு பத்திரிகை வைத்ததற்குக் காரணம் கார்க்கி எனது நண்பர். அப்பாவுக்கு பத்திரிகை வைத்தீர்களா? என்கிற அவரின் கேள்விக்காக சங்கடப்பட்டுக்கொண்டு சென்று பத்திரிகை வைத்தேன்.
திருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது.
அதன் பின்னர் திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை வைரமுத்து அழைத்தார். என்னால் வரமுடியாது என்று மறுத்தேன். காரணம் எனக்குத் திருமணமாகி இருந்தது. என் பக்கம் மாமனார் மாமியார் துணை இருந்ததால் வரமுடியாது என்று மறுத்தேன். அன்று எனக்கு கணவர் வீட்டார் துணை இருந்ததால் தைரியமாக நின்றேன்.
என்னுடன் இருக்கும் சக மாணவி வைரமுத்து பற்றி என்னை இப்படிச் செய்தார் என்று பொதுவில் வந்து பேசத் தயங்குகிறார். சொன்னால் கணவர் வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுவாரோ என்று பயப்படுகிறார். இதுதான் நிலைமை.
2012-ல் ட்விட்டரில் மிரட்டினார் என்று புகார் அளிக்கும் தைரியம் இருக்கும்போது ஏன் வைரமுத்து மீது புகார் அளிக்கவில்லை?
2012-ல் என்னை மிரட்டினார்கள். 2010, 11, 12 மூன்று ஆண்டுகளாக நடந்த விவகாரம். நான் போடாத ட்வீட்டை போட்டதாக இன்னமும் தமிழ் சமுதாயத்தில் நான் சொன்னேன் என்று நம்புகிறார்கள். எனக்கு மிரட்டல் வருகிறது. முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுகிறார்கள். கச்சேரியைக் குலைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள்.
பாலியல் புகார் வேறு, மிரட்டல் புகார் வேறு. மிரட்டல் புகாரில் போலீஸிடம் தொடர்ந்து கூறும்போது, போலீஸாரே நீங்கள் முறைப்படி புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியதால் புகார் அளித்தேன்.
ஆண்டாள் சர்ச்சை வைரமுத்து மீதான புகாரின் பின்னால் உள்ளதா?
அந்த ஆண்டாள் சர்ச்சை குறித்து நான் ஒரு ட்வீட் கூட போடவில்லை. நான் ஒரு விஷயமும் சொல்லவில்லை. மற்றவர்கள் என்னை வைத்து அரசியல் நடத்தினால் என் தப்பு இல்லை. என் பிரச்சினை எனக்கு நடந்த விஷயம் அது. நான் என்ன செய்ய முடியும். எனக்கு இது ஏன் என்று புரியவில்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.
‘மீ டூ’ 2006-ல் வந்தது. இது உலகம் முழுதும் வெடிக்கிறது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இது பெரிய பிரச்சினையாக மாறுகிறது. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதே வருகிறது. அவர் பாஜக அமைச்சர் இதில் ஒரு கான்செப்ட்டே இல்லையே? அவர் பாஜக அமைச்சர் நான் பாஜக இல்லையே?
உங்களை ஆதரிப்பவர்கள் இங்கு வைரமுத்து மீது புகார் பேசுகிறார்கள், ஆனால் எம்.ஜே.அக்பர் பற்றி பேச மறுக்கிறார்கள்?
அவர்தான் ராஜினாமா செய்துவிட்டாரே? எங்களுக்கு அரசியலே வேண்டாம், எங்கள் பிரச்சினையில் அரசியல் சாயம் பூசாதீர்கள். இதில் வலது, அதி தீவிர வலது, இடது, அதி தீவிர இடது, பொதுவில் இருப்பவர்கள் அத்தனை ஆண்களும் இதில் சிக்கியுள்ளனர். அனைவர் மீதும் புகார் வருகிறது. இதில் அமைச்சர், பத்திரிகையாளர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் இலக்காகியுள்ளனர். ஆகவே இதை அரசியல் ஆக்காதீர்கள். பெண்கள் தங்கள் பிரச்சினைக்காக வெளியே வந்தால் அவரை அனைவரும் பின்னோக்கித் தள்ளும் வேலையைத்தான் செய்கிறார்கள்.
நீங்கள் மற்ற பெண்களைவிட சற்று முதிர்ச்சியுள்ளவர்? உங்கள் பிரச்சினையை பேச வேண்டிய இடம் திரைத்துறையில் உள்ள சங்கத்தினரிடம். அதை ஏன் செய்யவில்லை?
மீ டூ பெண்கள் எல்லோருக்குமே ஒரு தைரியத்தைக் கொடுத்தது. இது மாதிரி சமூகத்தில் நடக்கும் விவகாரத்தை வெளியே கொண்டுவரும் இயக்கமாக அதைப் பார்க்கிறோம்.
இது மாதிரி விவகாரங்களுக்கு யாரிடம் போவது என்று தெரியாமல்தான் இருக்கிறோம். மும்பையில், கர்நாடகாவில் பல மாநிலங்களில் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இங்கு யாரிடம் புகார் கொடுப்பது என்பதுதான் பிரச்சினை.
வைரமுத்துமீது வழக்கு தொடுப்பீர்களா?
வைரமுத்து பற்றி பொதுவெளியில் இப்போதுதான் சொல்கிறேன். ஆனால் எனது தோழிகளிடம் எப்போதோ சொல்லிவிட்டேன். அவர் சரியான ஆள் கிடையாது, தவறான ஆள் என்று பெண்களான எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்களுக்குத்தான் தெரியாது. வைரமுத்து மீது கண்டிப்பாக வழக்கு தொடுப்பேன்.
2004 அல்லது 05-ம் ஆண்டா என்பது குறித்த சரியான தகவல் எனது ஞாபகத்தில் இல்லை. நான் போய் வந்த பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் உள்ளது. அந்த நிகழ்ச்சி நடந்ததற்கு ஆதாரம் அந்த பாஸ்போர்ட்டில் உள்ளது. அது எங்கே இருக்கிறது என்று வீட்டில் தேடுகிறேன். அதை வீட்டில் பத்திரமாக வைத்துள்ளதாக என் தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் 10 வீடுகள் மாறிவிட்டோம்.
அது எனது வழக்குக்கு ஆதாரம். அதனால்தான் இதுவரை நான் வழக்கு தொடுக்கவில்லை. எனது வழக்கறிஞரிடம் இதுகுறித்து பேசிக்கொண்டுத்தான் இருக்கிறோம். அதற்கான வேலையைச் செய்து வருகிறோம். இது ஏதோ நான் சும்ம ஹேஷ்டேக் போட்டுவிட்டுப் போகும் விஷயம் அல்ல. நான் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன்.
பத்திரிகைத் துறையிலேயே விசாகா கமிட்டி அமைக்கவில்லை. ஆனால், சினிமாத் துறை மிகப்பெரியது. இப்போது விஷால் மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது சினிமா, சின்னத்திரை என்று யோசிக்கவேண்டும்''.
இவ்வாறு சின்மயி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT