Last Updated : 02 Oct, 2018 04:53 PM

 

Published : 02 Oct 2018 04:53 PM
Last Updated : 02 Oct 2018 04:53 PM

‘‘உங்கள் அதிகாரத்தை அமைச்சரிடம் வைத்துக்கொள்ளுங்கள்’’- கிரண்பேடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிமுக எம்எல்ஏ அன்பழகன் இடையே நடந்த நேரடி வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற பிரதேசமாக அறிவிக்கும் விழா இன்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி தலைமை தாங்கி, பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், எம்.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழா அழைப்பிதழில் தொகுதி எம்எல்ஏ அன்பழகனின் (அதிமுக) பெயர் இருந்தாலும், நிகழ்ச்சி நிரலில் அவரது பெயர் இல்லை. விழாவிற்கு வந்தபோது இதையறிந்த அன்பழகன் எம்எல்ஏ அதிகாரிகளிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து வாழ்த்துரை வழங்க அனுமதிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து விழா தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ருத்ரகவுடு திறந்தவெளி கழிப்பிடமற்ற பிரதேசமாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அன்பழகன் எம்எல்ஏ வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டார்.

அப்போது அவர் குடியரசுத் தலைவர், பிரதமர் விழாக்களின்போதுதான் எம்எல்ஏ, எம்.பி.க்கள் உரையாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள், அதுபோன்ற முக்கிய விழா இது அல்ல. அதனால் எங்களைப் பேச அனுமதித்து நிகழ்ச்சி நிரல் தயாரித்து இருக்க வேண்டும். அமைச்சர்கள் எம்எல்ஏக்களை மதிக்காவிட்டால், ஆளுநர் எப்படி அமைச்சர்களை மதிப்பார். ஆளுநர் பொறுப்பேற்றது முதல் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அதற்கு மட்டும் அவரைப் பாராட்டுகிறேன் என்று கூறினார். மேலும் தனது பாராட்டை ஆங்கிலத்தில் ஆளுநரிடம் தெரிவிக்கும்படி அமைச்சர் கமலக்கண்ணனிடம் கேட்டுக்கொண்டார். அவரும் ஆளுநரிடம் அன்பழகனின் பாராட்டை ஆங்கிலத்தில் தெரிவிக்கவும் செய்தார்.

அதனைத் தொடர்ந்து அன்பழகன் பேசும்போது, ''என் தொகுதியில் 900-க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் உள்ளன. அதில் உள்ள இளம் பெண்கள் குளிப்பதற்கு குளியலறைகூட இல்லை, கழிப்பிடம் கட்டுவதற்கு 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் அளித்துள்ளனர், ஆனால் நிதியுதவி தரவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

சுமார் 10 நிமிடங்களாக அன்பழகன் பேசிக்கொண்டிருந்ததால், ஆளுநர் உத்தரவின்படி அதிகாரிகள் பேச்சை முடித்துக் கொள்ளுமாறு பேப்பரில் எழுதி இரண்டு முறை அவரிடம் கொடுத்தனர். ஆனால், நான் முடித்துக்கொள்ள மாட்டேன் எனக்கூறி அன்பழகன் தனது உரையைத் தொடர்ந்தார். சில நிமிடங்கள் சென்றவுடன் ஆளுநர் மிகவும் பிஸியாக இருக்கிறேன், வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும் என்று அன்பழகனுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அன்பழகன் அரசு மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யத் தவறும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் தெரிவிப்பார்கள், அங்கு தெரிவித்த பின்னரும் செய்யவில்லை என்றால் இதுபோன்ற அரசு விழாக்களில் பேசித் தெரிவிப்பார்கள், என்றார்.

மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றும் உள்ளாட்சித்துறைக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தினீர்களா? குப்பைகளை அகற்றும் ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா? அவர்களுக்கு மத்திய அரசின் உத்தரவுப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா? என்று அன்பழகன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்டு அரங்கில் இருந்த உள்ளாட்சித்துறை ஊழியர்களும், துப்புரவு ஊழியர்களும் கை தட்டினர்.

அன்பழகன் எம்எல்ஏ தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததையடுத்து ஆளுநர் கிரண்பேடி எழுந்து வந்து பேச்சை முடித்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால், அவர்பேச்சைத் தொடர்ந்தார். இதனால் மைக்கை ஆப் செய்ய ஆளுநர் உத்தரவிட்டார். இதன் பேரில், மைக் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.

இதனால், ஆவேசமடைந்த எம்எல்ஏ அன்பழகன் மக்கள் பிரதிநிதி நான் பேசும் போது திடீரென மைக்கை நிறுத்தக் கூறுவது தவறானது. இது எம்எல்ஏவை அவமதிக்கும் செயல். உங்களுடைய அதிகாரத்தை அமைச்சரிடம் வைத்துக்கொள்ளுங்கள், என்றார். அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடி நீங்கள் கூறுவது புரியவில்லை, தயவு செய்து வெளியேறுங்கள், என்றார்.

உடன் அன்பழகனும் நீங்கள் தவறு செய்கிறீர்கள். என்னிடம் அப்படியெல்லாம் பேசக்கூடாது. நான் வெளியேற மாட்டேன், நீங்கள் வெளியேறுங்கள் என்று மிகுந்த ஆவேசத்துடன் கூறினார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே மேடையில் நேரடியாக கடும் மோதல் நிலவியது. அப்போது அமைச்சர் நமச்சிவாயம் அன்பழகனை சமாதானம் செய்து அமரும்படி கூறினார். ஆனால் அன்பழகன் விழா மேடையில் அமர மறுத்து விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''எம்எல்ஏ பேசும்போது மைக்கை ஆப் செய்யச் சொல்லும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதி நான். நீங்கள் குறுக்கு வழியில் ஆளுநராக வந்துள்ளீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதியை அவமதிப்பது என்பது தவறான ஒன்று. ஆளுநர் மைக்கை ஆப் செய்யக் கூறுவதும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேடிக்கை பார்ப்பதும் அநாகரிகத்தின் உச்சக்கட்டம். இதன் மீது உரிமை மீறல் புகார் செய்ய முடியும் என்றால் புகார் செய்வேன். அதிமுக தலைமை அனுமதி பெற்று புகார் செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன்'' என்றார்.

இதன் பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்கு சென்ற எம்எல்ஏ அன்பழகன் அரசு விழா மேடையில் நடந்தது குறித்து சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் விளக்கமளித்தார். அதையடுத்து அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x