Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM

புதிதாக தொழில் வளர்ச்சிக் குழுமம்: 1.10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்

குறு மற்றும் சிறிய சாய, சலவை தொழிலுக்கும், அதுசார்ந்த ஜவுளித் தொழிலுக்கும் புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில், சாய, சலவைப் பட்டறைகள் இடம் பெயர உதவி செய்து, ஒரே இடத்தில் ஒருமுகப்படுத்தி தொழில் சார்ந்த வளர்ச்சிக் குழுமமாக உருவாக்கப்படும்.

இதன்மூலம் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும், நெசவுத் தொழில் மூலமாக 1 லட்சம் பேருக் கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் திங்கள் கிழமை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாமக்கல், ஈரோடு, சேலம், மற்றும் கரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள ஏறத்தாழ, 900 குறு மற்றும் சிறு சாய, சலவைப் பட்டறைகள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை நேரடியாக வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதுசார்ந்த நெசவுத் துறையிலும் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பின் அடிப்படை யாகவும் அமைகிறது.

மாறி வரும் சுற்றுச்சூழல் சட்டங் களின் தேவைக்கேற்ப பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பூஜ்ய திரவ வெளியேற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அரசின் வட்டியில்லா கடன் உதவி மூலம், திருப்பூரில் 18 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

ஆனால், குறு மற்றும் சிறு சாய, சலவைப் பட்டறைகளால் இத் தொழில் நுட்பத்தை செயல்படுத்த இயலாமல், சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீரை நேரடியாக வெளியேற்றுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுகளால் பெரும்பான்மையான சாய, சலவை பட்டறைகள் தங்களது தொழிலை தொடர முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

கட்டுப்பாட்டுடன் கூடிய நிலைத்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும். எனவே இச்சாய சலவைப் பட்டறைகள் இடம்பெயர உதவி செய்து, ஒரே இடத்தில் ஒருமுகப்படுத்தி தொழில் சார்ந்த வளர்ச்சிக் குழுமமாக உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தால் நேரடியாக சுமார் 10 ஆயிரம் பேருக்கும், அதுசார்ந்த நெசவுத் தொழில் மூலமாக ஒரு லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய இயலும்.

ரூ.700 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டச் செயல்பாட்டுக்கு தேவை யான முதலீட்டை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களைச் சார்ந்த திட்டங்களின் மூலமாக பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நிதி தேவைப்பட்டால் தமிழக அரசு வழங்கும். இத்திட்டம் நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை நடை முறைப்படுத்தும்.

இதன்மூலம் சாய, சலவை மற்றும் நெசவுத் தொழில் வளர்ச்சி அடைவதோடு நமது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.7,000 கோடி அளவுக்கு அதிகரிக்கவும், மாசு கட்டுப் பாட்டுக்குள் இருக்கவும் வழிவகை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x