Last Updated : 08 Oct, 2018 09:13 AM

 

Published : 08 Oct 2018 09:13 AM
Last Updated : 08 Oct 2018 09:13 AM

விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவீதம் குறைந்தது: தமிழக அரசு வாட் வரியைக் குறைக்க கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரண மாக, தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அவற்றின் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளாக தமிழ்நாடு பெட்ரோல் விநி யோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமி ழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வாகனங்களின் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரு கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 847 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 முதல் 14 சதவீதம் அதிகரித் துள்ளது. இதில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 210 ஆகும். இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் சுமார் 82 சதவீதமாகும். தமிழகத்தில் நாளொன்றுக்கு 3.22 கோடி லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. இந்நிலை யில், விலை உயர்வு காரணமாக கடந்த 3 மாதங்களாக இவற்றின் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோல் விநி யோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. ஆனால், கடந்த ஓராண்டாக இவற்றின் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் முதல் பெட்ரோல், டீசலின் விலை லிட்டர் ஒன்றுக்கு சராசரியாக ரூ.16 வரை அதிகரித்துள்ளது.

இந்த விலை ஏற்றம் காரணமாக பெட் ரோல், டீசல் விற்பனை குறைந்து வருகிறது. தமிழகத்தில் 4,600 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இவற்றின் மூலம், நாள் ஒன்றுக்கு 3.22 கோடி லிட்டர் அளவுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் விலை உயர்வு காரணமாக கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங் களில் 2 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 80 சதவீதம் அளவுக்கு உள்ளது. எஞ்சி யவை கார், லாரி உள்ளிட்ட 4 சக்கர வாகனங் கள் ஆகும். இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர் கள் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனங் களைப் பயன்படுத்துபவர்களில் பலர் தற்போது பொதுப் போக்குவரத்துக்கு மாறி விட்டனர். இதனால், பெட்ரோல் விற்பனை குறைந்துவிட்டது.

அதேபோல், நான்கு சக்கர வாகனங்களில் வர்த்தக வாகனங்கள்தான் அதிகளவில் டீசலை பயன்படுத்தி வருகின்றன. டீசலின் விலை உயர்ந்து வருவதால் அவற்றின் விற்பனையும் குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களுக்கு கிடைக்கும் மார்ஜின் தொகையில் 90 சத வீதம் தினசரி செலவுகளுக்கே சென்று விடு கிறது. இதனால், லாபம் குறைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மத்திய அரசு அண்மையில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2.50 குறைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு இவற்றின் விலையைக் குறைக்கவில்லை. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 32.16 சதவீதமும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 24.08 சதவீதமும் தமிழக அரசு அரசு வாட் வரி வசூல் செய்கிறது. எனவே, தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை குறைத்தால் கூட அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே வாட் வரியை குறைக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x