Published : 04 Oct 2018 10:57 AM
Last Updated : 04 Oct 2018 10:57 AM

காசநோயை ஒழிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு தனியார் ஆய்வகங்களில் இலவச எக்ஸ்ரே பரிசோதனை வசதி: சோதனை அடிப்படையில் வடசென்னையில் விரைவில் அமல்

சென்னையில் காசநோயை ஒழிக்க, தனியார் ஆய்வகங்களில் பொதுமக்கள் இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை செய்துகொள்ளும் வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த உள்ளது.

உலக அளவில் மனிதன் இறப்பதற்கு காரணமாக உள்ள முதல் 10 நோய்களில் ஒன்றாக காசநோய் உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர் முறையாக சிகிச்சை பெறாவிட்டால், அவர் ஒரு ஆண்டுக்கு சுமார் 10 பேருக்கு காசநோயை பரப்ப வாய்ப்புள்ளது. அதனால் அடுத்து வரும் 6 ஆண்டுகளில் ‘காசநோயற்ற சென்னை மாநகராட்சி’ என்ற நிலையை அடைய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் காசநோயை ஒழிக்க மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காசநோயை கண்டறிவதில் எக்ஸ்ரே பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகத்திடம் குறைந்த அளவே எக்ஸ்ரே பரிசோதனை கருவிகள் உள்ளன. அதனால் தனியார் ஆய்வகங்களில் பொதுமக்கள் இலவசமாக எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான தொகையை மாநகராட்சி நிர்வாகம், தனியார் ஆய்வகத்துக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

காசநோயால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் வீட்டில் இருப்போருக்கு, அந்நோயால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் அவர்களுக்கு காசநோய் பரிசோதனை மிகவும் அவசியம். காசநோயாளிகளை நவீன முறையில் கண்டுபிடிப்பதில், எக்ஸ்ரே பரிசோதனை இன்றியமையாதது. ஆனால் மாநகாரட்சி மற்றும் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே எடுக்கும் கருவிகள் குறைவாக உள்ளன. தனியார் ஆய்வகங்களில் எக்ஸ்ரே எடுக்க ரூ.150 வரை செலவிட வேண்டியுள்ளது.

இதற்கிடையில், தனியார் ஆய்வகங்களில் பொதுமக்கள் இலவசமாக எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளும் திட்டத்தை சோதனை அடிப்படையில் மாநகராட்சியின் வடசென்னை வட்டாரத்தில் செயல்படுத்த இருக்கிறோம்.

கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வடசென்னையில் 1,233 புதிய காசநோயாளிகள் பதிவு செய்துள்ளனர். அப்படியெனில், அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தலா 4 பேருக்கு காசநோயை பரப்ப வாய்ப்புள்ளது. அதனால் தோராயமாக 5 ஆயிரம் பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்கு மாநகராட்சி காசநோய் அலுவலர்கள் சார்பில் ரசீதுகள் வழங்கப்படும். அதைக் கொடுத்து தனியார் ஆய்வகங்களில் இலவசமாக பொதுமக்கள் எக்ஸ்ரே எடுத்துக்கொள்ளலாம். அந்த எக்ஸ்ரே, சம்பந்தப்பட்ட மருத்துவ அலுவலருக்கு அனுப்பப்பட்டு விடும்.

அந்த ரசீதுகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மாநகராட்சியிடம் சமர்ப்பித்து, அதற்கான தொகை யை தனியார் ஆய்வகம் பெற்றுக்கொள்ளும். இத்திட்டத் தில் விருப்பம் உள்ள தனியார் ஆய்வகங்களை அழைக்க இருக் கிறோம். குறைந்த விலைப்புள்ளி வழங்கும் ஆய்வகம் தேர்வு செய்யப்படும். இதன் வெற்றியை தொடர்ந்து மற்ற வட்டாரங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளால் காசநோய் இல்லாத சென்னை சாத்தியமாகும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x