Published : 19 Oct 2018 03:49 PM
Last Updated : 19 Oct 2018 03:49 PM
தமிழகத்தில் வறுமையின் பிடியில் இருக்கும் ஏழைகளின் திருமணத்தை நடத்த முடிவெடுத்துள்ள ஒரு தனியார் நிறுவனம் திருமணம் ஒன்றுக்குக் கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது. மாதத்துக்கு ஒரு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மை கிராண்ட் வெடிங் பிரைவேட் லிமிட் என்ற நிறுவனமே இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி, தேர்வு செய்யப்படும் மணமகன், மணப்பெண்ணுக்குப் புத்தாடைகள், புகைப்படம் எடுத்தல், ஆல்பம் தயாரித்தல், வீடியோ ஏற்பாடு செய்தல், அலங்காரத்துடன் கூடிய கார், காலை உணவு 50 பேருக்கு, திருமண அரங்கு ஆகிய ஏற்பாடு செய்யப்படும். திருமண அரங்கு ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள வெடிங் ஸ்டீர்ட் அரங்கில் நடைபெறும்.
இது குறித்து மை கிராண்ட் வெடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ சரத் கூறுகையில், சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்குச் சிறப்பான முறையில் திருமணம் நடத்துவது என்பது கனவாக இருந்து கொண்டு இருக்கிறது. மாதம்தோறும் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இந்த மக்களின் திருமணத்தை ஏன் நடத்தி வைக்கக்கூடாது என்று சிந்தனை தோன்றியது. அதுவும் அந்த மக்களிடம் இருந்து எந்தவிதமான பணமும் பெறாமல் இலவசமாகத் திருமணத்தை சிறப்பான முறையில் நடத்திவைக்க முடிவு செய்து ஒரு ரூபாய் திருமணத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.
இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக இருக்க விரும்பி, விண்ணப்பம் செய்பவர்கள், சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும். அது மணமகன் அல்லது மணமகள் இருவரில் ஒருவர் மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஊதியம் பெறுபவராக இருத்தல் வேண்டும். குறிப்பாக மணமகன், மணமகள் யாராவது ஒருவர் மட்டுமே வேலைக்குச் செல்பவராக இருத்தல் வேண்டும். அப்போதுதான் திருமணத்துக்குப்பின், அவர்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு செல்ல முடியும். இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ் கட்டாயம் அளிக்கவேண்டும். அதன்பின் எங்கள் நிறுவனம் சான்றிதழையும், அதில் அளிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையையும் ஆய்வு செய்யும்.
சாதி, மதம் இந்தத் திருமணத்துக்கு தடையில்லை. யார் வேண்டுமானும் இந்த திருமணத் திட்டத்தில் பங்கேற்கலாம். முதல்கட்டமாகத் தமிழகத்தில் மட்டும் இந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். சரியான பயனாளிகளைக் கண்டறியும் பொருட்டு நாங்கள் விளம்பரம் செய்து வருகிறோம். விரைவில் நிறுவனம் சார்பில் குழு அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஆய்வுசெய்து தேர்வு செய்யப்படும். முதல் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும். இதற்கான கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே எனத் தெரிவித்தார்.
சராசரியாகச் சிறிய திருமணம் ஒன்றுக்கு 300 விருந்தினர்கள் வரலாம், கோயிலில் திருமணம் நடத்தி, அதற்கான உணவுச் செலவைச் சேர்க்கும் போது ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருக்கும். இதில் எதை வேண்டுமானாலும் திருமணவீட்டார் தேர்வு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT