Published : 24 Oct 2018 02:24 PM
Last Updated : 24 Oct 2018 02:24 PM
பல்லடம் அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த பொங்கலூர் கண்டியன்கோவில் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (38). இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், சுதாகர் என்ற மகனும் உள்ளனர். ரமேஷின் தம்பி கஜேந்திரன் (35). இவருக்கு வனிதா என்ற மனைவியும், தனுஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் பெருந்தொழுவில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக வேலைக்குச் சென்றுவிட்டு மாலை இருவரும் அதே வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கஜேந்திரன் அருகில் கிடந்த இரும்புக்கம்பியைக் கொண்டு அண்ணன் ரமேஷை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவினாசிபாளையம் போலீஸார், ரமேஷின் உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், அண்ணனை அடித்துக் கொலை செய்த கஜேந்திரனைக் கைது செய்துள்ளனர். மது போதையால் ஏற்பட்ட தகராறில் உடன் பிறந்த அண்ணனை தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT