Published : 26 Oct 2018 08:56 AM
Last Updated : 26 Oct 2018 08:56 AM
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 900-த்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீத தேவையை இவை பூர்த்தி செய்கின்றன.
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மேலும், நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.தற்போது, சிவகாசியில் அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பெரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ராங்ஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, ஸ்பார்க்லர், அலுமினியம் பவுடர், மெக்னீஷியம், மெக்னாலியம், பெர்ரோ டைட்டானியம், பொட்டாஷியம் நைட்ரேட், பேரியம், கரித்தூள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஒலி, ஒளி மற்றும் வண்ணங்களை உமிழும் வகையில் சுமார்300 வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், இரவு 8 மணி முதல்10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ளதோடு, சரவெடிஉற்பத்தி செய்யவும், மத்தாப்பு வகைகள்தயாரிக்கவும் முக்கிய வேதிப்பொருளாகப்பயன்படுத்தப்படும் பேரியத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோலபல்வேறு கட்டுப்பாடுகளால் பட்டாசு உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலர் கூறியது: மத்தாப்புகள் தயாரிப்பதில் பேரியம் முக்கிய பங்கு வகிக்கிறது. கம்பி மத்தாப்பு, பூச்சட்டி, தரைச்சக்ககரம், சாட்டை, பென்சில் வெடிகளில் வர்ணத்தை உமிழ்வதற்கு இது முக்கியமான ரசாயனமாகப் பயன்படுத்தப்படுகிறது. பட்டாசுகளில் அலுமினிய பவுடரின் அளவைகுறைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அலுமினிய பவுடரின் அளவைக் குறைப்பதால் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சப்தமும் குறையும்.
இது பட்டாசுப் பிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.வரும் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு பட்டாசு உற்பத்தியைத் தொடங்குவது என்பதே சவாலாக இருக்கும். குறிப்பாக மத்தாப்பு ரகங்கள் தயாரிப்போர் முற்றிலுமாக பாதிக்கப்படுவார்கள். அதோடு, கடும்கட்டுப்பாடுகளால் உரிய அனுமதி பெற்றுசட்டத்துக்கு உட்பட்டு பட்டாசு தயாரிக்கும்சில ஆலைகள் மட்டுமே பட்டாசு உற்பத்தியைத் தொடர முடியும். சிறிய அளவில் உற்பத்தியை மேற்கொள்ளும் பட்டாசு ஆலைகளின் நிலை கேள்விக்குறியாகும்.
அதோடு, சட்டத்துக்குப் புறம்பாகவும் கள்ளத்தனமாகவும் பட்டாசு தயாரிப்பது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.எனவே, பேரியம் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதை நீதிமன்றம் தளர்த்தவேண்டும். அல்லது, அதற்கு இணையாக பயன்படுத்தும் வகையில் ரசாயனக் கலவையை அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள் விரைவில் கண்டுபிடித்துக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் சிவகாசி பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT