Published : 28 Apr 2014 04:59 PM
Last Updated : 28 Apr 2014 04:59 PM
கோடை விடுமுறை தொடங்கி விட்டது. நகரம் முதல் கிராமங்கள் வரை கிரிக்கெட் விளையாட்டு கொடி கட்டி பறக்கிறது. பொழுது விடிஞ்சவுடன் மட்டையும் கையுமாகதான் நம்ம பசங்களை பார்க்க முடியுது என புலம்பாத பெற்றோர்களே இல்லை.
இது ஒருபுறம் இருக்க நகரங்களில் இன்டர்நெட், டி.வி, செல்போன் என தவம் கிடக்கும் பிள்ளைகளும் அதிகமாக இருக்கின்றனர்.
மேலும், சம்மர் ஸ்பெஷல் வகுப்புகளுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தும் பெற்றோர் தொல்லை தாங்காமல் வேண்டா வெறுப்பாக செல்பவர்களும் உண்டு. இதுபோன்ற தாக்கம் ஏதுமின்றி, சில கிராமத்து சிறுவர்கள் பனை நுங்கு வண்டி, டயர் வண்டி, மாட்டு வண்டி போன்ற விளையாட்டு பொருட்களை தயார் செய்து, மண்வாசனை மாறாத கிராமத்து தெருக்களில் ஆடு, மாடுகளுக்கு நடுவே கிராமங்களில் விளையாடுவதைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. கிராமங்களில் எல்லாப் பருவத்திலும் விளையாட ஏதோ ஒரு பொருள் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
அதில் குறிப்பிடத்தக்கது, பள்ளி கோடை விடுமுறை தொடங்கும் போது கிடைக்கும் நுங்கு வண்டி. வெயில் காலத்தில் நுங்கு வரத்து அதிகமாக இருக்கும்.
பனை மரத்தில் இருந்து நுங்கு குலையை பெரியவர்கள் இறக்கி வந்தவுடன் அவர்களை வட்டமடிக்கும் இந்த சிறுவர்களுக்கு பதமான நுங்கை லாவகமாக சீவி கொடுக்க, அதை அப்படியே கட்டை விரலால் குத்தி நுங்கை சாப்பிடும் போதே அதில் வெளிப்படும் சுவையான நுங்கின் இளநீர் முகத்தில் பீச்சியடிக்கும்.
அப்படியே உதட்டோடு ஒட்டி உறிஞ்சிய பின்னர், சக்கர வடிவில் மீதமாகும் நுங்கு குதக்கைகள் இரண்டை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் ஏதோ ஒரு மரத்தில் கிளை பிரியும் இடமாக பார்த்து கவட்டை வடிவில் நீளமான குச்சியை தயார் செய்து, இரண்டு நுங்கு குதக்கையை இணைத்து கவட்டை குச்சியை நடுவில் பொருத்தி, சத்தம் வருவதற்கென நுங்கு சக்கரத்தில் ஒரு அட்டையைச் செருகி, சர்ர்ர்ர்ர்... என்ற சத்தத்துடன் கிளம்பி விடுகிறது நுங்கு வண்டி.
இதில் யார் வண்டி வேகமாக செல்லும், யார் செய்த வண்டி நன்றாக இருக்கிறது என்ற ஆரேக்கியமான போட்டிகளும் உண்டு. சாதாரண நாட்களில் சிறுவர்களை கடைக்கு அல்லது ஏதாவது இடத்திற்கு சென்று வரச் சொன்னால் போக அடம் பிடிப்பார்கள், இவர்கள் தயாரிப்பில் உருவான நுங்கு வண்டி இருந்தால், மறுப்பேதும் செல்லாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு சமர்த்தாக சென்று வருகின்றனர்.
விளம்பர மயமாகிப்போன நகர்ப்புற விளையாட்டுக்களுக்கு மத்தியில் சுயமாக உருவாக்கி விளையாடி மகிழ்ந்த நுங்கு வண்டி இன்னும் திருச்சி அருகே சில கிராமங்களில் இன்னும் உயிர்ப்புடன் ஓடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
விளையாட்டு கட்ட வண்டி…
இதேபோல கிராமத்து சிறுவர்களுக்கு என திருச்சியை அடுத்த வயலூரைச் சேர்ந்த முத்துசாமி என்ற பெரியவர் மாட்டு (கட்ட) வண்டி செய்து திருவிழாக்கள் மற்றும் கிராமங்களில் சென்று விற்பனை செய்கிறார். இந்த வண்டி செய்வது குறித்து அவர் கூறுகையில்,
“கடந்த 30 ஆண்டுகளாக இந்த கட்ட வண்டி செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இதற்கு பெரிதாக முதலீடு எல்லாம் இல்லை. மார்க்கெட்டில் வீணாகும் ஆப்பிள் பெட்டியை (சாதாரண மரத்தால் ஆனது) எடுத்து வந்து, வட்ட வடிவில் இரண்டு சக்கரம், செவ்வக வடிவில் ஒரு சட்டம், அதற்கு மேல் கூடாரம் அமைக்க ஒரு அட்டை, வண்டியின் முன் களிமண்ணால் செய்த சிறு குவளையின் மேல் பகுதியை பேப்பரில் ஓட்டி தயார் செய்த மேளம், வண்டியை சிறுவர்கள் இழுத்து செல்ல ஒரு கயிறு அவ்வளவுதான். வண்டியை இழுக்கும் போது இரு சக்கரங்களை இணைக்கு நடுகுச்சியில் இணைக்கப்பட்ட மற்றொரு குச்சி மேளத்தில் அடித்து டம்... டம்... என ஒலி எழுப்பிக்கொண்டே செல்லும்.
ஒரு கட்ட வண்டியின் விலை ரூ.20 என விற்பனை செய்கிறேன். ஆரம்ப காலத்தில் 50 பைசாவுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறேன். இப்ப விக்குற விலைவாசியில் இதுவே கஷ்டமாக இருக்கிறது” என்கிறார்.
வண்ணங்களின் அழகில் மயங்கி நாம் வாங்கும் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது அல்ல. எளிதில் மக்கும் பொருட்களால் உருவாக்கப்படும் இதுபோன்ற கிராமத்து விளையாட்டுப் பொருட்கள் முத்துசாமி போன்ற மனிதர்களுக்குப் பின் இல்லாமல் போய்விடும் என்பதுதான் வருத்தமான விஷயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT