Last Updated : 03 Oct, 2018 07:57 AM

 

Published : 03 Oct 2018 07:57 AM
Last Updated : 03 Oct 2018 07:57 AM

மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை வசூலித்ததுதான் சுகாதாரத் துறை ஊழலின் தொடக்கம்: ‘தி இந்து மையம்’ நடத்திய விவாத நிகழ்ச்சியில் டாக்டர்கள் கருத்து

மருத்துவ மாணவர் சேர்க்கை யின்போது கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கின்றனர். இதில் இருந்துதான் சுகாதாரத் துறை ஊழல் தொடங்குகிறது என்று மருத்துவத் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

‘குணப்படுத்துபவர்களா? வேட் டையாடுபவர்களா? இந்திய சுகாதாரத் துறை ஊழல்’ என்ற தலைப்பிலான நூலை ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டுள்ளது. ‘இந்து’ என்.ராம் தொகுத்துள்ள இந்த நூலின் அறிமுக விழா மற்றும் சுகாதாரத் துறை ஊழல் குறித்த விவாதம் ‘தி இந்து மையம்’ சார்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை குடல்நோய் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சை துறை முன்னாள் தலைவர் டாக்டர் சமிரான் நந்தி, மத்திய சுகாதாரத் துறை முன்னாள் செயலர் கேசவ் தேசிராஜு, சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் எம்.கே.மணி, எலும்பியல் நிபுணர் டாக்டர் ஜார்ஜ் தாமஸ் ஆகியோர் இதில் கலந்துகொண்டு பேசினர். அவர்கள் கூறியதாவது:

டாக்டர் மணி: அரசு மருத்துவ மனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று நாம் அனைவரும் நெருக்கடி தர வேண்டும். மீறி, அவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், அந்தச் செலவை அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மருத்துவமனைகளின் தரம் தானாக உயரும். இன்சூரன்ஸ் என்ற பெயரில் அரசுப் பணம் தனியாருக்குச் செல்கிறது. ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் ஊழலை ஒழிக்க எந்த விதத்திலும் பயன்படவில்லை. அரசுப் பணம் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த மட்டுமே பயன்பட வேண்டும்.

டாக்டர் கேசவ் தேசிராஜு: கடந்த 1990-களில்தான் மருத்துவக் கல்லூரிகள் தனியார்மயம் ஆகின. அதற்கு முன்பு பெரிய அளவில் மருத்துவத் துறையில் ஊழல் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை பணம் செலுத்தி சேர ஆரம்பித்தனர். அவர்கள் டாக்டர் ஆனதும் அந்தப் பணத்தை திரும்ப எடுக்க ஆசைப்படுகின்றனர். இதுதான் சுகாதாரத் துறை ஊழலின் ஆரம்பம். இந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழகத்தில் குறைந்தது மாவட்டத்துக்கு ஒரு அரசுக் கல்லூரி உண்டு. உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதற்குமே 8 அரசுக் கல்லூரிகள்தான் உள்ளன. அரசுக் கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும். நியாயமான கட்டணத்தில் டாக்டர்கள் படித்து பட்டம் பெறும்போதுதான் லாப நோக்கமின்றி நியாயமாக செயல்படத் தொடங்குவார்கள்.

டாக்டர் சமிரான் நந்தி: டாக்டர்கள் பலர் அரசியல்வாதி களின் பின்னால் போவது, நேர்மையற்ற வழியில் பணியாற்றுவதே ஊழலுக்கு அடிப்படை. ஆனால், பேன்யன், வேலூர் சிஎம்சி உள்ளிட்ட பல அமைப்புகள் சிறப்பாக சேவை செய்கின்றன.

டாக்டர் ஜார்ஜ் தாமஸ்: அனைத்து டாக்டர்களும் மோச மானவர்கள் என்று கருதக்கூடாது. நேர்மையாக செயல்படும் டாக்டர்கள் பலர் உள்ளனர். தவிர, சுகாதாரத் துறை ஊழலுக்கு டாக்டர்கள் மட்டுமே காரணம் அல்ல.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

பின்னர் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, ‘‘பிரிட்டனில் உள்ள மருத்துவ கவுன்சில் போன்ற அமைப்பு இந்தியாவில் உருவாக வேண்டும். ஊழலற்ற சுகாதாரத் துறையை உருவாக்க அரசுக்கு மக்கள் நெருக்கடி தர வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x