Published : 22 Oct 2018 09:53 AM
Last Updated : 22 Oct 2018 09:53 AM
அடுத்த மாதம் 6-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகரில் தீவுத்திடல், போரூர், ராயப்பேட்டை, நந்தம்பாக்கம் ஆகிய இடங்களில் பட்டாசு மெகா விற்பனை 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. புதிய ரக பட்டாசுகளுடன் அனைத்து வகையான பட்டாசுகளும் சிவகாசியில் தயாராகி வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆங்காங்கே பலசரக்கு உள்ளிட்ட கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. இருப்பினும், சில குறிப்பிட்ட இடங்களில் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டாசு மெகா விற்பனை தொடங்கும். அதன்படி பார்த்தால் இப்போதே விற்பனை தொடங்கியிருக்க வேண்டும். தீவுத்திடல் விற்பனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை 24-ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. அன்றைய தினம் அனுமதி கிடைத்ததும் மறுநாள் முதல் (அக்.25) தீவுத்திடலில் பட்டாசு விற்பனையை தொடங்க பட்டாசு விற்பனையாளர்கள் தயாராக உள்ளனர்.
இதுகுறித்து சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் நல சங்கத் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா கூறியதாவது: தீவுத்திடல் விற்பனை தொடர்பான வழக்கில் 24-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததும் 25-ம் தேதி முதல் விற்பனை தொடங்கும். தீவுத்திடலில் மட்டும் 70 கடைகள். ஒவ்வொன்றிலும் சராசரியாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பட்டாசுகள் இருக்கும். இதுதவிர ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், போரூர் சரவணா ஸ்டோர்ஸ் எதிரே உள்ள மைதானம் ஆகிய இடங்களிலும் பட்டாசு மெகா விற்பனை நடைபெறும்.
கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது விலையில் மாற்றமில்லை. கடந்தாண்டு விற்பனை குறைவு என்பதால் சுமார் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் இருப்பில் உள்ளன. இந்தாண்டு 34 வகையான புதிய பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.142 முதல் ரூ.4,240 வரையில் புதிய பட்டாசுகள் விற்பனைக்கு தயாராகவுள்ளன. அதில், வானத்தில் 24 தடவை, 80 தடவை வர்ணஜாலம் காட்டும் “வெட்டிங் சீரீஸ்” பட்டாசு சிறப்பு.
ரூ.250 முதல் ரூ.8 ஆயிரம் வரை கிப்ட் பாக்ஸும் துப்பாக்கி ரூ.20 முதல் ரூ.400 வரையும் கிடைக்கும். 400 ரூபாய் துப்பாக்கி நிஜ துப்பாக்கி போலவே சற்று கனமாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிக சத்தத்துடன் வெடிக்கும் அணுகுண்டு போன்ற பட்டாசு விற்பனை கிடையாது. தீவுத்திடலில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பட்டாசு கடைகள் காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை திறந்திருக்கும். விலைப்பட்டியல் விலைக்கே பட்டாசு விற்கப்படும். சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதித்துள்ளோம். இவ்வாறு ஷேக் அப்துல்லா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT