Published : 24 Oct 2018 11:42 AM
Last Updated : 24 Oct 2018 11:42 AM
திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். 2007-ம் ஆண்டும், பின்னர் 2013-ம் ஆண்டும் அவர் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுகிறது. எனவே அவர் இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் திமுகவுக்கு அதிகஅளவு எம்எல்ஏக்கள் இருப்பதால் கூடுதலான மாநிலங்களவை எம்.பி.க்களை இந்தமுறை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் அவர் மக்களவையில் இருந்து எம்.பி.யாக தேர்வாக விரும்புவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில் ‘‘மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்படுவதில் எந்த தவறும் இல்லை. இருப்பினும் அரசியல்வாதியாக மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். நேரடி தேர்தல் மூலமே வாக்காளர்களை சந்திக்க முடியும். அவர்களுடன் நல்லுறவை பேண முடியும்’’ என தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளும் தங்கள் தொகுதியில் இருந்து கனிமொழி மக்களவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. கனிமொழியை தவிர, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிடோரும் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை தொகுதி
நாகை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயன் திருச்சி மக்களவை தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் அந்த தொகுதி, இந்த முறை கூட்டணிக் கட்சிக்கு, குறிப்பாக இடதுசாரி கட்சிக்கு கொடுக்கப்பட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் ‘‘அனைவரும் ஏற்கும் நபர் என்ற அடிப்படையிலேயே விஜயன் திருச்சி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதுபோலவே சுப்புலட்சுமி ஜெகதீசன் கரூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அர்த்தமல்ல.
சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளை பொறுத்தவரை உரிய எண்ணிக்கையில் தொகுதிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு இடமளிக்கவே திமுக விரும்புகிறது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் உட்பட மக்களவை தொகுதி பணிகள் 75 சதவீதம் அளவுக்கு முடித்து விட்டோம்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT