Published : 21 Apr 2014 03:00 PM
Last Updated : 21 Apr 2014 03:00 PM

‘முற்றிலும் மாறுபட்டவன், வேறுபட்டவன்’: திருப்பூரில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

இன்றைக்கு அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் முகம் சுழிக்கிறார்கள். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன் நான் என, திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசினார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பெருமாநல்லூர் நான்குசாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை பேசியது: மக்களுக்கு பணியாற்றத்தான் நான் தேர்தலில் நிற்கிறேன். சாதிமத வேறுபாடின்றி அரசியல் கட்சிகள் பாரபட்சமின்றி தொகுதி பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். இன்றைக்கு அரசியல்வாதிகள் என்றாலே முகம் சுழிக்கும் அளவிற்கு, மக்கள் ஆளாகி இருக்கிறார்கள். ஊரை கொள்ளையடிப்பவர்கள் என்று தான் நினைக்க வேண்டிய நிலைக்கு உள்ளது. இதிலிருந்து முற்றிலும் மாறுப்படவன்; வேறுபட்டவன் நான்.

நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன். நாமெல்லாம் ஒரு தாயின் குழந்தைகள். ஆனால், நாட்டை மதத்தின் பெயரால், ஒட்டுமொத்தமாக துண்டாட நினைக்கிறார்கள், எதிர் முகாமில் இருப்பவர்கள். அவர்களுக்கு வாய்ப்புகொடுத்தால், நாட்டின் ஒற்றுமை கெடும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றால் மீண்டும் காங்கிரஸ் ஆள வேண்டும்.

மக்கள் வாழ்வதற்கு உணவு உடை வாழ இருப்பிடம் தேவை. ஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரை மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான குடிநீர் இல்லை. இன்றைக்கு பல கிராமங்களில் குடிநீர் பஞ்சத்தால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகத்தில் அதிசயமான ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாறாக, குடிநீரை விலைக்கு விற்கும் ஒரே அரசு, தமிழக அரசு தான்.

ஒரு குடும்பம் நடத்த தேவையான பொருளாதார வளத்தை, தனி மனித வாழ்வில் ஏற்படுத்தவில்லை. இப்படிப்பட்ட தீய சக்திகளுக்கு, இடம் கொடுக்க வேண்டாம் என்றார். பெருமாநல்லூர் தொடங்கி நெருப்பெரிச்சல் வரை பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x