Published : 16 Oct 2018 01:24 PM
Last Updated : 16 Oct 2018 01:24 PM
மூத்த பத்திரிகையாளரும் அறிவியல் எழுத்தாளருமான என்.ராமதுரை காலமானார். அவருக்கு வயது 85.
‘தினமணி’ நாளிதழின் செய்தி ஆசிரியராகவும், தினமணியின் வார இணைப்பாக வெளிவந்த ‘தினமணி சுடரின்’ பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். ‘விண்வெளி’, ‘அணு’, ‘அறிவியல் - எது ஏன் எப்படி?’, ‘எங்கே இன்னொரு பூமி?’, ‘பருவநிலை மாற்றம்’ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
இந்து தமிழ், தினமணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அறிவியல் தொடர்பான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘அறிவியல்புரம்’ எனும் பெயரில் நடத்திவந்த வலைப்பூவில், அறிவியல் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
1967-ல் ஐஸக் அஸிமோவ் எழுதிய ‘இன்சைட் தி ஆட்டெம்’ புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் என்.ராமதுரை. 1989-ல் அமெரிக்க மற்றும் பிரிட்டன் அரசுகளின் அழைப்பில் அந்நாடுகளின் முக்கிய அறிவியல் நிறுவனங்களுக்குச் சென்றுவந்தார். இந்த அனுபவத்தை ‘தினமணி கதிர்’ வார இதழில், ‘செல்வச் சீமையிலே’ என்ற தலைப்பில் தொடர் பயணக் கட்டுரையாக எழுதினார்.
2009-ல் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான புத்தகங்கள் எழுதியதற்காக, சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழக அரசு மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுகளையும் பெற்றுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அறிவியல் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்.
அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அறிவியல் மட்டுமல்லாமல் விளையாட்டு உள்ளிட்ட பலதுறைகளைப் பற்றியும் எழுதியவர் அவர். உழைக்கும் பத்திரிகையாளர்களுக்காகப் பத்திரிகையாளர்களால் கூட்டுறவு முறையில் 60-களில் வெளிவந்த ‘நவமணி’ நாளிதழிலும் பணியாற்றியிருக்கிறார்.
எளிய தமிழில் அறிவியல் தொடர்பான விஷயங்களை எழுதிய என்.ராமதுரையின் மரணம் அறிவுலகத்தை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியிருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT