Published : 08 Oct 2018 12:44 PM
Last Updated : 08 Oct 2018 12:44 PM
சென்னை மாநிலக் கல்லூரியில் ‘நாக்’ கமிட்டி நடத்திய ஆய்வில் அக்கல்லூரியானது குறைந்த மதிப்பெண்களுடன் ‘பி’ ப்ளஸ் கிரேடு பெற்றுள்ளது.
‘நாக்’ எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அமைப்பானது, இந்தியாவின் உயர்கல்வி நிறுவனனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் அமைப்பாகும். இந்த அமைப்பானது சமீபத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் ஆய்வு நடத்தியது. இதற்காக, 3 பேர் கொண்ட குழுவினர் கல்லூரியில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் மாநிலக் கல்லூரி ‘பி’ ப்ளஸ் கிரேடு பெற்றுள்ளது.
3 மதிப்பெண்கள் பெற்று ‘ஏ’ கிரேடு பெறுவோம் என கல்லூரி நிர்வாகம் நம்பிய சூழ்நிலையில், ‘நாக்’ கமிட்டி ஆய்வில் மாநிலக் கல்லூரி 2.58 புள்ளிகளுடன் ‘பி’ ப்ளஸ் கிரேடு பெற்றுள்ளது. கடினமான புதிய மதிப்பீட்டு முறையே இத்தகைய குறைந்த மதிப்பெண்களுக்கு காரணம் எனக்கூறும் கல்லூரி முதல்வர் ஆர்.ராவணன், இந்த முடிவு ஏமாற்றத்தைத் தருவதாக தெரிவித்துள்ளார்.
“நாக் கமிட்டியின் மதிப்பீடானது 70 சதவீதம் எஸ்.எஸ்.ஆர் எனப்படும் தன்னாய்வு அறிக்கை மூலமாகவும் 30 சதவீதம் ‘நாக்’ கமிட்டி அதிகாரிகள் மூலமாக நேரடியாகவும் மேற்கொள்ளப்பட்டது. தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாலேயே கல்லூரிக்கு மதிப்பெண்கள் குறைந்துள்ளது” என கல்லூரி முதல்வர் ராவணன் தெரிவித்தார்.
முந்தைய காலங்களில் நேரடியாக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் மாநிலக் கல்லூரிக்கு அதிக மதிப்பெண்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போது நடைபெற்ற மதிப்பீட்டில் பேராசிரியர்களால் வழங்கப்படும் தொழில்துறை ஆலோசனைகளுக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. “தொழில்துறை ஆலோசனைகள் வழங்க பல்கலைக்கழகம் விதிகள் அனுமதிக்காது. நாங்கள் ஆய்வில் சிறந்தவர்களாக இருக்கிறோம்.
ஆனால், எங்களுக்கு தொழில்துறை ஒத்துழைப்பு இல்லை” என ராவணன் தெரிவித்தார். இந்த ஆய்வின் மதிப்பெண்கள் குறித்து மறுமதிப்பீடு செய்ய ‘நாக்’ கமிட்டி ஒரு மாத காலம் அவகாசம் அளித்துள்ளது. உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
இதைவிட அதிக மதிப்பெண்கள் பெறும்போது மாநிலக் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு தக்க வைத்துக்கொள்ள முடியும். அதிகாரிகள் நேரடியாக கல்லூரிக்கு வந்து ஆய்வு நடத்துவது அவசியம். சில பேராசியர்கள், மாநிலக் கல்லூரி நிர்வாகத்தை மறுமதிப்பீட்டுக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர். குறிப்பாக, மற்ற மாநிலங்களுக்கான ‘நாக்’ கமிட்டி பேராசிரியர்களே இதனை பரிந்துரைத்துள்ளனர்.
ஆய்வறிக்கை:
உள்கட்டுமானம், அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை கல்லூரியின் தன்னாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலக் கல்லூரிக்கு அதிக காலத்திற்கு பொறுப்பு முதல்வர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் கல்லூரிக்கு பிரத்யேக மின்சார வசதி இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியின் முன்னாள் முதல்வர் பிரம்மானந்த பெருமாள், “கல்லூரியில் எப்போதும் ஆயிரம் ஆய்வு மாணவர்கள் உள்ளனர். குறைந்த ஆய்வுத்தரம் கொண்ட கல்லூரிக்கு ‘ஏ’ கிரேடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநிலக் கல்லூரிக்கு கிரேடு குறைந்துள்ளதைப் பார்க்கும்போது ‘நாக்’ கமிட்டி அதிகாரிகள் சமாதானம் அடையவில்லை என்பதையே காட்டுகிறது” என தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு மாநில கல்லூரிக்கு நாட்டிலேயே 5-வது இடத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT