Last Updated : 09 Oct, 2018 02:39 PM

 

Published : 09 Oct 2018 02:39 PM
Last Updated : 09 Oct 2018 02:39 PM

டெல்லியில் விருது பெற்ற அரசுப் பள்ளி மாணவரை வாழ்த்தி பேனர்கள் வைத்த கிராமவாசிகள்

வழக்கமாக நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு பேனர் வைக்கும் புதுச்சேரியில் முதல் முறையாக டெல்லி சென்று பரிசு வென்ற அரசுப் பள்ளி மாணவரை வாழ்த்தி கிராமவாசிகள் ஏராளமான பேனர்களை வைத்துள்ளனர்.

புதுச்சேரி சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சஞ்சீவ். டைல்ஸ் தொழிலாளியின் மகனான இவர், தூய்மை இந்தியா திட்டம் குறித்த தங்களது கருத்துகளை தபால் அட்டையில் எழுதி பிரதமருக்கு அனுப்பும் போட்டியில் பங்கேற்றார்.

சஞ்சீவ் எழுதிய தபால் அட்டை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றார். அதையடுத்து கடந்த 2-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பரிசினை அளித்தார்.

மாணவர் சஞ்சீவ், அவரது பள்ளித் தலைமை ஆசிரியை செல்வி ஆகியோர் டெல்லி சென்று பரிசு பெற்றனர்.

இந்நிலையில் டெல்லி சென்று பரிசு வென்ற அரசுப் பள்ளி மாணவரை வாழ்த்தி கிராமவாசிகள் பல இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக வில்லியனூர், சேந்தநத்தம், ராமநாதபுரம், ஊசுடேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பேனர்களை வைத்துள்ளனர்.

வழக்கமாக புதுச்சேரியில் நடிகர்கள், அரசியல்வாதிகள் தொடங்கி பலருக்குதான் பேனர்கள் அதிகளவில் இடம் பெறுவது வழக்கம். முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர் டெல்லியில் விருது பெற்றதற்காக கிராமவாசிகள் பல இடங்களில் பேனர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x