Published : 07 Aug 2018 09:48 PM
Last Updated : 07 Aug 2018 09:48 PM

கருணாநிதி உடலை புதைக்க மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும்; தமிழக அரசு அரசியல் செய்யக்கூடாது: ராமதாஸ்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் எந்த வகையிலும் அரசியல் செய்யக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''மெரினா கடற்கரையில் தலைவர்கள் உடலை நல்லடக்கம் செய்வதற்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தான் மெரினா கடற்கரையில் கலைஞர் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க இயலவில்லை என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த போதும், மெரினாவில் தலைவர்கள் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் இருந்தன.

ஆனாலும், அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்குள் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்படவிருக்கிறது.

அவ்வாறு இருக்கும் போது கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு மட்டும் வழக்குகளைக் காரணம் காட்டுவது சரியல்ல. அரசியல்ரீதியிலான கருத்து வேறுபாடுகள் ஏராளமாக இருந்தாலும் கூட தமிழக அரசியலில் கருணாநிதி தவிர்க்க முடியாத தலைவர்.

80 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்ததுடன், தமிழகத்தின் முதலமைச்சராக மிக அதிக காலம் 19 ஆண்டுகள் பதவி வகித்தவர். அவரது மறைவும், இறுதிச் சடங்குகளும் மிகவும் கவுரவமாக நடைபெற வேண்டும். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க அரசு மறுத்ததைக் கண்டித்து பல இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கத் தொடங்கியுள்ளன.

இது மேலும் பெரிதாகாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் தேவையில்லாத அரசியல் செய்யாமல் சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x