Published : 13 Aug 2018 08:54 AM
Last Updated : 13 Aug 2018 08:54 AM

சென்னையுடன் புதிதாக இணைந்த அனைத்து பகுதிகளிலும் தற்காலிக கூரை உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரியில் 25 சதவீதம் தள்ளுபடி: மாநகராட்சி நிர்வாகம் முடிவு

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், தற்காலிக கூரை உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரியில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி உள் ளிட்ட உள்ளாட்சிப் பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங் களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக சொத்து வரி கணக்கிடப்பட வேண்டும் என்ற நோக்கில், மாநகராட்சி சார்பில் சொத்து வரி சீரமைப்பு குழு அமைக்கப்பட்டது. மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) தலைமையில் மாநகராட்சி வருவாய் அலுவலர், அனைத்து மண்டல அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் இதில் உள்ளனர்.

சொத்து வரி சீரமைப்பு தொடர்பாக பல்வேறு பரிந்துரை களை மாநகராட்சி ஆணையரிடம் இக்குழு வழங்கியது. சில நாட்களுக்கு முன்பு அரசிதழில் அந்த பரிந்துரைகள் வெளியிடப் பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறை கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் பின்பற்றப்படும் சொத்து வரி கணக்கீட்டு முறையே மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

முந்தைய சென்னை மாநகராட்சி யில் உள்ள அனைத்து தெருக் களுக்கும் தெருவாரியான அடிப்படை கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதன் அடிப் படையில் சொத்து வரி கணக்கிடப்பட்டு வருகிறது.

மாநகராட்சியுடன் இணைக்கப் பட்ட உள்ளாட்சி பகுதிகளில் உள்ள தெருக்களுக்கும், தெரு வாரியாக அடிப்படை கட்டணம் நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் சொத்து வரி கணக்கிட சொத்து வரி சீரமைப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.

1960-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டப்படி, பதிவுத் துறையால் வெளியிடப்பட்ட வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் நிலத்தின் மதிப்பும், பொதுப்பணித் துறையால் கட்டுமானங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை கொண்டு கட்டிடங்களின் மதிப்பும் கணக்கிடப்பட்டு, சொத்து மதிப்பு நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் அனைத்து தெருக்களுக்கும் தெருவாரியாக அடிப்படை கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியில் ஒருசில பகுதிகளில் மட்டும் தற்காலிக மேற்கூரை கொண்ட கட்டிடங்களுக்கு சொத்து வரியில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒருசில பகுதிகளில் இந்த வகை கட்டிடங்களுக்கு எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படுவது இல்லை. இந்த நடைமுறை மாற்றப்படுகிறது. தற்போது விரிவாக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்காலிக மேற்கூரை கொண்ட கட்டிடங்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி அனுமதித்து சொத்து வரி விதிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களுக்கு ஆட்சேபம் இருந்தால் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x