Published : 01 Aug 2018 04:53 PM
Last Updated : 01 Aug 2018 04:53 PM
திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு தடையை மீறி நடைபயணம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அரசாங்கப் பணத்தை மடை மாற்றுவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
சென்னை-சேலம் இடையில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்த பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை ‘என் நிலம், என் உரிமை’ என்ற கோஷத்துடன் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
திட்டமிட்டபடி திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் புதன்கிழமை திரண்டனர். பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி செல்வத்துக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சாலையின் குறுக்கே இரும்புத் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினர். ஆனால், போலீஸாரின் தடையையும் மீறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றனர். தடையை மீறி செல்ல முயன்ற பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பல உண்மைக்கு மாறான காரணங்களைக் கூறி சென்னை-சேலம் இடையில் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. ஏற்கெனவே சேலத்துக்கு மூன்று சாலைகள் இருக்கும்போது நான்காவது சாலை தேவையில்லை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து.
இந்த சாலை அமைந்தால் தொழிற்சாலைகள் தொடங்கப்படும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். இந்த சாலை அமைக்க 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 2 ஆயிரம் ஏக்கர் வனங்கள் அழிக்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரங்கள் சாம்பலாக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு நடைபயணம் என்று அறிவித்திருக்கிறோம். காவல் துறை கூறும் நிபந்தனைகளை பின்பற்றி அமைதியாக நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த பிறகும் போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். தமிழக அரசு அடக்குமுறைகளை ஏவி மக்களின் ஜனாநயக உரிமைகளைப் பறிக்க முடியாது.
5 ஆயிரம் சைக்கிள்களை திரட்டி பிரதான சாலையில் அதிமுகவினர் பிரச்சாரம் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடத்தப்படும் நடைபயணத்துக்கு அனுமதி மறுக்கிறார்கள். மத்திய அரசு, மாநில அரசு சேர்ந்துதான் இந்த மோசமான நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள்.
இந்தத் திட்டத்தில் ஒரு கி.மீ.தொலைவு சாலை செப்பனிட 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். உலகில் எந்த நாட்டிலாவது இவ்வளவு தொகையை ஒதுக்கியுள்ளார்களா? இவர்கள் என்ன தங்கத்திலா சாலை போடுகிறார்கள். இந்த சாலை மக்களுக்காக அல்ல. அரசாங்கப் பணத்தை மடை மாற்றுவதற்கான ஒரு ஏற்பாடு. இதுவரை அமைத்துள்ள சாலையால் என்ன பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடியுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சரே சொல்லி இருக்கிறார்” என்றார் பாலகிருஷ்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT