Published : 16 Aug 2018 05:25 PM
Last Updated : 16 Aug 2018 05:25 PM
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம் கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மாவட்ட திட்ட இயக்குநர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கோவிலடி என்ற இடத்திலிருந்து கீழணை எனப்படும் அணைக்கரை வரை கொள்ளிடம் ஆறு தஞ்சாவூர் மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து செல்கிறது. இந்த மாவட்டத்தில் பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில் 33 ஊராட்சிகளில் உள்ள மக்கள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கின்றனர்.
மேட்டூர் நிலவரப்படி இன்று காலை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பவானிசாகர் அணை நிரம்பி அதன் நீரும் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீரும் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் கலந்து வருகிறது. அதேபோல் அமராவதி அணையும் நிரம்பி கரூர் மாவட்டத்தில் காவிரியில் வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 3 லட்சம் கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது அந்த நீர் இன்று மாலை கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படும். காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் சுமார் 25 ஆயிரம் கன அடி நீர் பகிர்ந்து திறக்கப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் பாபநாசம் வட்டாரத்தில் சருக்கை, கோவிந்தநாட்டுச்சேரி, புதுக்குடி , கும்பகோணம் வட்டாரத்தில் குடிதாங்கி ஆகிய கிராமங்கள் தாழ்வான பகுதியாகக் கண்டறியப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கொள்ளிடம் கரையோரம் உள்ள அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், பிடிஓக்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்களோடு முழு வீச்சில் களப்பணியில் ஈடுபட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இன்று மாலை கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் வரும் என்பதால் இந்த நான்கு இடங்களிலும் 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. என்னுடைய தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் தண்ணீர் வருவதை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த நான்கு பகுதியிலும் கரை உடைப்பு ஏற்பட்டது. அதன்பிறகு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக பாதுகாப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்”.
இவ்வாறு மாவட்ட திட்ட இயக்குநர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT