Published : 31 Aug 2018 02:03 PM
Last Updated : 31 Aug 2018 02:03 PM
ரூ.3 லட்சம் செலவு செய்து இங்கிலாந்தை சேர்ந்த புதுமண தம்பதி யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலில் அவர்கள் மட்டும் பயணம் செய்தனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியாளர் கிரகாம் வில்லியம் லியன் (30), போலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சில்வியா பிலாசிக் (27). இருவரும் சமீபத்தில் திருமணம் செய்த தம்பதி.
திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதில், இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணிக்க விரும்பி, ரயில்வே டூரிஸம் (ஐஆர்சிடிசி) மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ரூ.3 லட்சம் பணம் செலுத்தி முன் பதிவு செய்திருந்தனர்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தனர். நீராவி மூலம் இயங்கும் மலை ரயிலின் சிறப்புகளை கேட்டறிந்தனர். அவர்களுக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலைய அதிகாரி வேதமாணிக்கம் விளக்கி கூறினார்.
புதுமண தம்பதி கூறும் போது, “முதல்முறையாக இந்தியா வந்துள்ளோம். இந்தியாவில், யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் அழகான அமைதியான நாடாக இந்தியா திகழ்கிறது” என்றனர்.
பின்னர் இருவரும், மற்ற பயணிகள் இன்றி சிறப்பு ரயில் மூலம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் ஐஆர்சிடிசி சுற்றுலா அலுவலர் சசிதர் வழிகாட்டியாக உடன் சென்றார். குன்னூர் வந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து புறபட்டவர்கள் உதகை வந்தடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT