Published : 24 Aug 2018 04:44 PM
Last Updated : 24 Aug 2018 04:44 PM

மீண்டும் வைகை ஆறு வறண்டது: தென் மாவட்ட மக்களின் மகிழ்ச்சி 2 நாள் கூட நீடிக்காத பரிதாபம்

வைகை அணையில் இருந்து வெறும் 250 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்படுவதால் அந்த தண்ணீர் மதுரையை எட்டாததால் மீண்டும் வைகை ஆறு வறண்டுவிட்டது. வைகை ஆற்றில் வந்த தண்ணீரை இரண்டு நாள் கூட கொண்டாட முடியாமல் தென் மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் பெய்த கனமழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வைகை அணைக்கு அங்கிருந்து 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மூல வைகையிலும் ஒரளவு மழை பெய்ததால் வைகை அணை நீர்மட்டம் இந்த சீசனில் 10 ஆண்டுக்குப் பிறகு கடந்த வாரம் 69 அடியை எட்டியது. அதனால், பெரியாறு ஒரு போக பாசன கால்வாயிலும், வைகை ஆற்றிலும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் 22-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ஆரம்பத்தில் வைகை அணையில் இருந்து ஆற்றில் 3 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மதுரை வைகை ஆற்றில் கடந்த இரண்டு நாளாக ஒரளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாளுக்கு பிறகு வைகை ஆற்றில் தண்ணீர் ஓடியதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த கரையோர மக்கள், இளைஞர்கள், ஆற்றில் நீராடி உற்சாகமடைந்தனர். அவர்களுடைய இந்த மகிழ்ச்சி இரண்டு நாள் கூட நீடிக்கவில்லை. புதன்கிழமையே வைகை அணையில் இருந்து ஆற்றில் திறந்துவிடும் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 250 கனஅடியாக குறைத்தனர். அதனால், வியாழக்கிழமை காலை முதல் மதுரை வைகை ஆறு மீண்டும் நீரோட்டமில்லாமல் வறண்டது.

தற்போது ஆற்றில் ஒரு மூலையில் சிறிதளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் வைகை ஆற்றங்கரையில் உள்ள தனியார் நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் தங்களுடைய கழிவுநீரை, வைகை ஆற்றில் ஓடிய தண்ணீருடன் கலந்து வெளியேற்றினர். தற்போது ஆற்றில் நீரோட்டம் வறண்டதால் தனியார் வெளியேற்ற கழிவு நீர் ஆற்றின் பல இடங்களில் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. பல இடங்களில் ஆற்றில் நீரோட்டமில்லை என்பதை மறந்த தனியார் குடியிருப்பு நிறுவனத்தினர் கழிவுநீரை வைகை ஆற்றில் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால், மீண்டும் வைகை ஆறு சுகாதார சீர்கேடு அடைந்து தன்னுடைய இயல்பு நிலையை அடைந்துள்ளது. தற்போது வைகை ஆற்றை கடந்து செல்லும் மக்கள், நீரோட்டமில்லாவிட்டாலும் துர்நாற்றம் வீசுவதால் என்றுதான் இந்த ஆற்றுக்கு விமோசனம் பிறக்கும் என தங்களை தாங்களே நொந்துகொண்டு செல்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை. ஆனாலும், வைகை அணையில் 69 அடியை தக்க வைக்க பெரியாறு அணையில் இருந்து வைகை 2 ஆயிரத்து 300 கனஅடியை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆற்றில் தற்போது 230 கனஅடி திறந்துவிட்டுள்ளோம்.

58 கிராம கால்வாயில் சிறு உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த 250 கனஅடி நீரை வைகை ஆற்றில் திறந்துவிடுகிறோம். உடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மூல வைகையில் மழைப்பொழிவும், அங்கிருந்து நீர் வரத்தும் சுத்தமாக நின்றுவிட்டதால் பெரியாறில் திறந்துவிடும் தண்ணீரை கொண்டே வைகை அணை நீர் மட்டத்தை தக்க வைக்க வேண்டிய உள்ளது. அதனால்,வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்த உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x