Published : 01 Aug 2018 04:30 PM
Last Updated : 01 Aug 2018 04:30 PM
கோவையில் அதிவேகமாகப் பாய்ந்து வந்த சொகுசுக் கார் மோதியதில், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்கள், இரு ஆண்கள் ஆகியோர் இந்த விபத்தில் பரிதாபமாகப் பலியானார்கள்.
கோவை ஈச்சனாரியில் பிரபல தனியார் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் உரிமையாளரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிபவர் ஜெகதீஷ்குமார் (34). நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த இவர், கல்லூரியில் தங்கியுள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரியிலிருந்து, போத்தனூரில் உள்ள கல்லூரி உரிமையாளர் வீட்டுக்கு காரில் புறப்பட்டுள்ளார். காரை மிகுந்த வேகமாக ஓட்டியுள்ளார்.
கோவை-பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் ஐயர் ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார், சாலையோரமிருந்த பூக்கடை மீதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீதும், மின்கம்பம் மீதும் மோதியதுடன், பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீதும் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அங்கு பூக்கடை நடத்தி வந்த சந்திரசேகர் மனைவி அம்சவேணி (34), தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்ற குறிச்சி பகுதி மாணவி சுபாஷினி (19), ரேஷன் கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த குப்பாத்தாள் (74), வி.நாராயணன் (70), ஸ்ரீரங்கதாஸ் (69) மற்றும் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் என 6 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாகப் பலியானார்கள். அவர்களது உடல்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், சோமசுந்தரம் (65), சுரேஷ் (40), நடராஜ் (65) ஆகியோர் காயமடைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ஜெகதீஷ்குமாரை அங்கிருந்தவர்கள் அடித்து, உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா, துணை ஆணையர்கள் லட்சுமி, சுஜித்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்து குறித்து விசாரித்தனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, “நெருக்கடி மிகுந்த பகுதியில், அதிவேகமாக கார் வந்ததே விபத்துக்குக் காரணம். பேருந்துக்கு காத்திருந்த கல்லூரி மாணவி உள்ளிட்டோரும், அங்கு பூக்கடை வைத்திருந்த பெண்மணியும் நொடிப்பொழுதில் உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ நொறுங்கிவிட்டது. சாலையோரமுள்ள மின்கம்பம் சாய்ந்து, மின் வயர் அறுந்து விழும் அளவுக்கு, அந்த சொசுசு கார் தறிகெட்டுப் பாய்ந்து வந்தது. கண் மூடித் திறப்பதற்குள் விபத்து நிகழ்ந்துவிட்டது. இனியும் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க, வேகக்கட்டுப்பாட்டை மிகத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT