Published : 27 Aug 2018 08:58 AM
Last Updated : 27 Aug 2018 08:58 AM
எம்-சாண்ட் தயாரிக்கும் நிறுவனங் கள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நவீன மேற்தண்டு தாக்கு விசை (Vertical Shaft Impact) இயந்திரங்களுக்கு மாற வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு பாறை சிதைந்து ஒரு கன மீட்டர் மணல் உருவாக 400 ஆண்டுகள் தேவைப்படுவதாக புவியியல் துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய மணல் வளம், ஆறுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மணலுக்கு மாற்றாக எம்-சாண்ட்.ஐ தமிழக அரசு பிரபலப்படுத்தி வருகிறது. அத னால் பல கல்குவாரிகள், எம்- சாண்ட் உற்பத்தியைத் தொடங்கி யுள்ளன. அதில் போலி எம்-சாண்ட் விற்பனையும் அதிகரித்துள்ளது.
அதைத் தடுக்கும் விதமாக எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங்களை முறைப்படுத்தவும், அந்நிறுவனங் களுக்கு உரிய அனுமதி வழங்கு வதற்கான வழிகாட்டு நெறிமுறை களை வகுக்கவும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
அக்குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் பொதுப்பணித் துறையிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கை ஆகியவற்றை பரிசீலித்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அனைத்து எம்-சாண்ட் உற்பத்தி நிறுவனங் களும், நவீன மேற்தண்டு தாக்கு விசை இயந்திரங்களுக்கு (VSI) மாற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் கூறிய தாவது:
எம்-சாண்ட் உற்பத்தி என்பது தமிழகத்தில் புதிய முறை என்ப தால், அதை முறைப்படுத்து வதற்கான விதிகளை உருவாக்க அமைக்கப்பட்ட குழு சில பரிந் துரைகளை வழங்கியது. மேலும் பொதுப்பணித் துறையும் சில பரிந்துரைகளை வழங்கின. இவை குறித்து கடந்த மாதம் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன், வாரியத் தலைவர் நசிமுத்தின் ஆகியோர் தலைமையில் விவாதிக் கப்பட்டது.
அதில் எம்- சாண்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகள், மாசுக் கட்டுப்பாட்டு விதிகள் உள் ளிட்டவை வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எம்-சாண்ட் உற் பத்தி நிறுவனங்கள், மிதமான மாசு ஏற்படுத்தும் ‘ஆரஞ்சு’ வகை நிறுவனங்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. எம்-சாண்ட் மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், வேறு எந்த கல் உடைப்பு இயந்திரமும் இருக்கக் கூடாது.
பொதுப்பணித் துறை வழங்கிய அறிக்கையில், எம்-சாண்ட் தயாரிக்க, விஎஸ்ஐ இயந்திரம் மட்டுமே சிறந்தது.
அதை மட்டுமே எம்-சாண்ட் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதால், இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக் குள், இதர கல் உடைக்கும் இயந் திரங்களை மாற்றி, விஎஸ்ஐ இயந் திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எம்-சாண்ட் மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்திலும், குடியிருப்பு பகுதியாக அங்கீகரிக் கப்பட்ட பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்திலும் அமைந்திருக்க வேண்டும்.
சுற்றுச்சுவர், உலோகத் தகடுகள்
அருகில் உள்ள பகுதிகளுக்கு தூசிகள் பறந்து செல்வதைத் தடுக்க, அந்நிறுவனங்களைச் சுற்றி 10 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து, அதற்கு மேல் 5 அடி உயரத்துக்கு உலோகத் தகடு களைப் பதிக்க வேண்டும். நிறுவ னத்தின் உள்பகுதியைச் சுற்றி 5 மீட்டர் அகலத்தில் உள்ளூர் வகையைச் சேர்ந்த வேம்பு, புளியமரக் கன்றுகளை நட்டு, பசுமைப் போர்வையை ஏற்படுத்த வேண்டும்.
அந்த இயந்திரங்களில் தயாரிக் கப்பட்ட எம்-சாண்டை பொதுப் பணித் துறையிடம் வழங்கி, தரச் சான்று பெற வேண்டும். இவ் வாறு விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஎஸ்ஐ இயந்திரங்களின் சிறப்பு குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பாறைகளைச் சக்கைகளாக உடைக்கக்கூடியது ஜாவ் இயந் திரங்கள். அந்தச் சக்கைகளை ஜல்லியாக உடைக்கக் கூடியது கோன் இயந்திரங்கள். இதில் கிடைக்கும் துகள்களைச் சிலர் எம்-சாண்ட் என்று விற்கின்றனர்.
உண்மையில் எம்-சாண்ட் என்பது சிறு கற்கண்டைப் போன்று கன வடிவில் 4.75 மிமீ தடிமனுக்கும் குறைவாக இருக் கும்.
அந்த வடிவத்தை விஎஸ்ஐ இயந்திரங்கள் மட்டுமே அளிக் கின்றன. அது மட்டுமே உறுதியா னது. எனவே அந்த இயந்திரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT