Published : 14 Aug 2018 09:20 AM
Last Updated : 14 Aug 2018 09:20 AM

சுதந்திர தினம் மட்டுமல்ல.. நாளை கிராமசபை கூட்டம் நடக்கும் தினம்: பங்கேற்போம்.. விவாதிப்போம்.. தீர்மானிப்போம்!

நாளை ஆகஸ்ட் 15, சுதந்திர தினம். தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதுடன் முடிந்துவிடுவதில்லை நமது ஜனநாயகக் கடமை. காந்தியடிகள் வலியுறுத்திய பஞ்சாயத்து ராஜ்ஜி யத்தை வலுப்படுத்த, அன்றைய தினம் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதும் நம் கடமை. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காத தால், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கிராமங்களில் அடிப்படைப் பணிகள் தொடங்கி பொருளாதாரம் வரை நிலை குலைந்து போயிருக்கிறது. இந்தச் சூழலில் நாளைய கிராம சபைக் கூட்டத்தில் நாம் கலந்துகொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினம் (ஜனவரி 26), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய 4 நாட்கள் கிராமசபைக் கூட்டத்தை கூட்டுவது கட்டாயம்.

நாளை (ஆகஸ்ட் 15) நடத்த வேண்டிய கிராமசபைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை, சுகாதார திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட விவாதிக்க வேண்டிய தீர்மானங்களை தற்போது தமிழக அரசே அளித்துள்ளது.

மாநில அரசு அளித்துள்ள தீர்மானங்களுடன் அந்தந்த கிராமங்களுக்கு தேவையான தீர்மானங்களையும் கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்று வது அவசியம். குறிப்பாக உள் ளாட்சித் தேர்தலை உடனே நடத்துவது குறித்து அனைத்து பஞ்சாயத்துகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இதுகுறித்து பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பான விழிப் புணர்வு களப் பணிகளில் இயங்கி வரும் நந்தகுமார் கூறியதாவது:

மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகள், மக்களின் தேவை கள், கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு கிராமசபையில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் இறுதிசெய்ய வேண்டும்.

அந்த விழிப்புணர்வு இல்லாத தால் அனைத்து ஊராட்சி களுக்கும் சேர்த்து ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை இயக்குநரகத்தால் தீர்மானங்கள் தயாரிக்கப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 15 கிராம சபைக்கான அஜெண்டா சில நாட்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநரகத்தால் வெளி யிடப்பட்டுள்ளது. இது ஒவ் வொரு கிராமசபை பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஒட்டப்பட் டிருக்கும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் இதை படித்து விட்டு அதன் நகலையும் எடுத்துக்கொண்டு கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். தீர்மான அம்சங்கள் குறித்து விவாதித்து, திட்டங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டம் குறித்து மாவட்ட நிர் வாகம் அந்தந்த கிராமங்களில் தண்டோரா ஒலித்தும், பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டியும் தெரிவிக்க வேண்டும். சில இடங்களில் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டாலும், பரவலாக நிலைமை மாறிவருகிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே இதுபற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக பங்கேற்கின் றனர். பஞ்சாயத்தின் செயல்பாடு கள், அடிப்படை பணிகள், அரசுத் திட்டங்கள் குறித்து கேள்வி கேட்கின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க விரும்பு வோர் வழக்கமாக கிராமசபை கூடும் இடத்தில் திரண்டு, காலை 10 மணிக்கு கூட்டம் நடத்தவில்லை என்றால், அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அப்படியும் யாரும் வராவிட்டால், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் தற்போதைய மத்திய அரசு பல சீர்திருத்தங்களை செய்துள்ளது. அதில் முக்கியமானது, வெளிப் படையான நிதி நிர்வாகம். ‘பஞ்சா யத்து ராஜ் இன்ஸ்டிடியூஷன்ஸ் டிரான்ஸ்பரன்ட் அக்கவுன்டிங்’ என்கிற மென்பொருள் மூலம் இது சாத்தியமாகி உள்ளது. தங்களது கிராமப் பஞ்சாயத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கி யுள்ள நிதி மற்றும் வரவு செலவு கள் குறித்து இணையதளத்தில் (www.accountingonline.gov.in) தெரிந்துகொண்டு, உரிய புள்ளி விவரங்களுடன் சென்றால், கிராம சபையில் முறையாக கேள்வி எழுப்பலாம். இது உங்கள் வரவை ஆக்கப்பூர்வமாக்கும்!

நிறைவேற்றுவதும், செயல்படுத்துவதும்..

கிராமத்தின் மக்கள்தொகை 500 பேர் என்றால், கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற 50 பேர் வேண்டும். 501 - 3000 பேர் என்றால் 100 பேரும், 3001 - 10,000 மக்கள்தொகை என்றால் 200 பேரும் வேண்டும். 10,000-க்கு மேற்பட்டோரைக் கொண்ட கிராமத்துக்கு 300 பேர் வேண்டும்.

கிராமசபை மூலம் பெறப்பட்ட திட்டப் பணிகள், அதுகுறித்த ஆலோசனை தொடர்பான பணிகளை ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2-க்குள் நிறைவேற்ற வேண்டும். டிசம்பர் 30-க்குள் சிறப்பு கிராமசபைகளை கூட்டி பணிகளை அங்கீகரிப்பது, தீர்மானங்களை ஒன்றியத்துக்கு அனுப்புவது, அதை ஒன்றியங்கள் பரிசீலித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்புவது, ஆண்டு திட்டப் பணிகள் அறிக்கை, ஊதிய நிதிநிலை அறிக்கை அந்தந்த கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் படிப்படியாக மத்திய அரசு வரை அனுப்பப்பட்டு, மார்ச் 31-க்குள் மேற்கண்ட அனைத்துக்கும் மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏப்ரல் 7-க்குள் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x