Last Updated : 07 Aug, 2018 10:16 PM

 

Published : 07 Aug 2018 10:16 PM
Last Updated : 07 Aug 2018 10:16 PM

தனித்தன்மை வாய்ந்த ஆளுமை கொண்ட தலைவரை இழந்துவிட்டோம்: எச்டி குமாரசாமி இரங்கல்

 தனித்தன்மைவாய்ந்த திமுக தலைவர் கருணாநிதியை இழந்துவிட்டோம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய அரசியலில் தனித்தன்மை வாய்ந்த ஆளுமைபடைத்த தலைவரை நாங்கள் இழந்துவிட்டோம். தமிழகத்தின் நலனுக்காக தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் கருணாநிதி. தன் வாழ்க்கை முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தனது கட்சியை வலுப்படுத்தியதில் சிறப்பு மிக்கவர் கருணாநிதி.

நான் பலமுறை கருணாநிதியைச் சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவர் என்னிடம் மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார். சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கும் மக்களை உயர்த்துவதற்காக எண்ணற்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. அவரின் இழப்பு பேரிழப்பாகும்'' என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா கூறுகையில், "நான் என்னுடைய மூத்த சகோதரரை இழந்துவிட்டேன். என்னை பிரதமராக கொண்டு வருவதற்கு கருணாநிதி ஆதரவு கொடுத்ததில் முக்கியப் பங்கு அவருக்கு உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ். எடியூரப்பா தன்னுடைய இரங்கல் செய்தியில், ''5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி எப்போதும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று இருப்பார். கர்நாடக , தமிழக மக்களுக்கு இணைப்புப் பாலமாக கருணாநிதி இருந்து வந்தார். கன்னட கவிஞர் சர்வஜனா சிலையை சென்னையிலும், தமிழ்புலவர் திருவள்ளுவர் சிலையை பெங்களூரிலும் நிறுவ உதவியவர்'' என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்ட அறிவிப்பில், " திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். தமிழக அரசியலில் மிக உயர்ந்த ஆளுமைத்திறன் கொண்டவர். இந்திய அரசியலிலும் மிகக் குறிப்பிடத்தகுந்த பங்காற்றியவர். திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசுகளை உருவாக்கியவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x