Published : 16 Aug 2018 12:53 PM
Last Updated : 16 Aug 2018 12:53 PM
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் 1955 -ம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் கோவை மாவட்டம் பில்லூர் அணை முழுமையாக நிரம்பிய நிலையில், உபரி நீர் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் நீர் மட்டம் 102 அடியாக உள்ள நிலையில், உபரி நீர் முழுமையாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சத்தியமங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆற்றில் தொடர்ந்து நீர் திறக்கப்படுவதால் பாதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகாயத்தாமரையால் ஆபத்து
பவானி ஆற்றில் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், பவானி கூடுதுறை பகுதியில் அது காவிரி ஆற்றில் கலக்கிறது. இப்பகுதியில் ஆற்றை முழுமையாக மூடியுள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்படாததால், ஆற்றில் நீர் செல்வது தடைபட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் நீர் புகுந்து வருகிறது. இதையடுத்து, பவானி பாலம் அருகே ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதல் கொடிவேரி தடுப்பணையில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி தடுப்பணை முழுவதையும் மறைக்கும் வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கொடிவேரி அணையை ஒட்டிய விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
ஈரோடு - நாமக்கல -, சேலத்தை இணைக்கும் பள்ளிபாளையம் பழைய பாலத்தையொட்டி நீர் செல்வதால் அந்த வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் மட்டும் போக்குவரத்து அதிகரித்துள்ளது. காவரி ஆற்றில் பவானி ஆற்றின் உபரி நீரும் சேர்ந்து இருப்பதால், காசிபாளையம், கொடுமுடி, சத்திரப்பட்டி, கோம்புபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
காவிரி மற்றும் பவானி ஆற்றில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர் மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.1 டிஎம்சியாகவும் உள்ளது. பவானிசாகர் அணையில் 105 அடி உயரும் வரையில், 32.8 டிஎம்சி அளவு நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையில் இருந்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மதகுகள் வழியாக தற்போது உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையிலான அதிகாரிகள் இப்பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT