Published : 25 Aug 2018 03:43 PM
Last Updated : 25 Aug 2018 03:43 PM

சென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை சுரங்கப்பாதையில் முதல்முறையாக டீசல் இன்ஜினை 5 முதல் 10 கி.மீ வேகத்தில் இயக்கி மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னையில் தற்போது சுமார் 35 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், விமான நிலையம் போன்ற முக்கிய பகுதி கள் இதன்மூலம் இணைக்கப்பட் டுள்ளதால், தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அடுத்தகட்டமாக அண்ணாசாலை டிஎம்எஸ், சென்ட்ரல் வழியாக வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஏற்கெனவே, தோண்டப்பட்ட சுரங்கம் வழியாக பாதைகள் அமைத்தல், சிக்னல் அமைத்தல், ரயில் நிலையங்கள் உருவாக்குதல் போன்ற கட்டமைப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இதற்கிடையே, டிஎம்எஸ் பகுதியில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையில் 9.5 கி.மீ தூரம் சுரங்கப்பாதை வழியாக டீசல் இன்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டது. டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அந்த வழியாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வில் சென்னை ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் வி.கே.சிங், இயக்குநர்கள் திவேதி, இளம்பூர்ணன், கூடுதல் பொதுமேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரகாசம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இவர்கள் நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை (9.5 கி.மீ) சுரங்க வழித்தடத்தில் முதல்முறையாக டீசல் இன்ஜினை மெதுவாக இயக்கி தண்டவாளத்தின் தரத்தை அளவீடு செய்தோம். தற்போது, ஒரு தடத்தில் அதாவது, டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை செல்லும் தடத்தில் மட்டுமே ஆய்வு நடத்தியுள்ளோம்.

மெட்ரோ ரயில் நிலையங்களை கடந்து செல்லும் வகையில் இன்ஜினை இயக்கி ஆய்வு நடத்தினோம். எந்த இடத்திலாவது சுவர் மோதுகிறதா? தடுப்புகள் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொழில்நுட்ப ரீதியாக சோதித்துப் பார்த்தோம்.

கூவம் ஆற்றுப்பகுதி மற்றும் அங்குள்ள புறநகர் மின்சார ரயில் பாதை கீழே செல்லும் இடத்தில் ஏதாவது இடையூறு இருக்கிறதா என்றும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே டீசல் இன்ஜினை இயக்கி ஆய்வு செய்வோம்.

மின்தடங்கள் அமைத்து, சிக்னல் அமைத்த பிறகு மின்சார இன்ஜின் மூலம் ஆய்வு நடத்துவோம். மெட்ரோ ரயில் மூலம் சோதனை நடத்தப்படும். அதன்பிறகு, ஆணையரிடம் ஒப்புதல் பெறப்படும். எனவே, இந்த ஆண்டு இறுதியில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x