Published : 10 Aug 2014 01:17 PM
Last Updated : 10 Aug 2014 01:17 PM

மது வருமானத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் மீது நஞ்சைத் திணிப்பதா? - டாக்டர் ராமதாஸ் காட்டம்

பொது வாக்கெடுப்பு நடத்தி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியிருக்கிறார். இதற்காக, மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பது உட்பட அவர் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

மதுவால் மிகப்பெரிய சீரழிவை தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. மது அருந்துவதால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் சராசரியாக 16 ஆயிரம் பேரும், தற்கொலைகளில் சராசரியாக 17 ஆயிரம் பேரும் உயிரிழக்கிறார்கள். இந்த இரு அவலங்களிலும் தமிழகம் பல ஆண்டுகளாக முதலிடம் வகிப்பதற்கு முதன்மைக் காரணம் மது தான். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதைக் கடந்தவர்கள் தான் மது அருந்தினார்கள் என்ற நிலை மாறி இப்போது 12 வயது இளைஞர்கள் கூட போதைக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதும், மது அருந்துவதற்கு பணம் கிடைக்காத சூழலில், அதைத் திரட்ட மோசமான குற்றத்தை செய்யக்கூட தயங்குவதில்லை என்பதும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன.

உலக சுகாதார இயக்கம் 2 மாதங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், மது அருந்துவோருக்கு புற்று நோய், காசநோய், நிமோனியா, கல்லீரல் இழைநார் அழற்சி உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும், பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையை மாற்ற தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி இந்தக் கோரிக்கையை தட்டிக் கழித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏன் கொண்டுவர முடியாது? என்பதற்காக அமைச்சர் விஸ்வநாதன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணானவையாக உள்ளன. மதுவிற்பனை மூலம் வருவாய் வர வேண்டும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் அல்ல என்று கூறிய அமைச்சர், அடுத்த சில நொடிகளில் மது விற்பனை மூலம் தமிழகத்திற்கு வருவாய் வந்தே தீர வேண்டும் என்கிறார். மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாராயம் அதிகரித்துவிடும் என்பதால், மதுவிலக்கு சாத்தியமல்ல என்று ஒரு கட்டத்தில் கூறிய அமைச்சர், மதுவால் கிடைக்கும் வருமானத்தை மத்திய அரசு கொடுத்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயார் என்று தெரிவித்திருக்கிறார்.

மது விற்பனை செய்வது தீமை என்றாலும் அதன் மூலம் வருமானம் எனும் நன்மை கிடைப்பதாக அமைச்சர் கூறியுள்ள ஒற்றை வாக்கியமே, பணத்திற்காக எதையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கும் என்பதை உணர்த்திவிடும். அரசுக்கு வருமானம் எனும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் மீது மது நஞ்சு எனும் பெரும் தீமையை திணிக்க அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது. மதுவிலக்குத் தொடர்பான விவாதத்தின் போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது பற்றி ஆலோசனை வழங்குமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் கோரியிருந்தால் அவரது சமூக அக்கறையை நம்மால் பாராட்ட முடியும். ஆனால், அவரோ,‘‘மது மூலம் வருவாயும் வர வேண்டும்; சமூகமும் விழிப்புணர்வும் பெற வேண்டும். அதற்கேற்ப ஆலோசனை வழங்குங்கள்’’ என்று கூறியதன் மூலம் தமது மன ஓட்டத்தை வெளிப்படுத்தி விட்டார். இப்படிப்பட்டவரிடம் மது விலக்கை எதிர்பார்ப்பது கம்சனிடம் கருணையை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானதாகும்.

ஒருவேளை வருமானம் தான் முக்கியமென்றால் அதை ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் பா.ம.க. தெரிவித்திருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கையை பா.ம.க. வெளியிட்டிருக்கிறது. அதை செயல்படுத்தினாலே தமிழகத்தில் மது ஒழிந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராய விற்பனை பெருகிவிடும் என்பதும் சொத்தையான வாதம் தான். அரசு நினைத்தால் கள்ளச்சாராய விற்பனையை அடியோடு ஒழித்துவிடலாம். 1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மலிவுவிலை மதுவை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தார். அதே போன்ற உத்தரவை இப்போதும் பிறப்பித்து, கடுமையாக செயல்படுத்துவதன் மூலம் கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்துவிட முடியும்.

அவ்வாறு செய்யாமல் கள்ளச்சாராயத்தைக் காரணம் காட்டி மதுவிலக்கிற்கு தடை போட முயல்வதன் மூலம், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த இயலாது என்று கூறி முதல்வரையும், காவல்துறையையும் இழிவு படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் மதுவிலக்கு குறித்து சரியான புரிதல் அமைச்சருக்கு இல்லை. மின்துறை அமைச்சராகவும் இருக்கும் விஸ்வநாதன், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பதிலாக மின்வெட்டை நடைமுறைப்படுத்துகிறார்; மதுவிலக்குக்கு அமைச்சராக இருக்கும் இவர் மதுவை ஒழிப்பதற்கு பதில் ஊக்குவிக்கிறார். இவரை மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் என்று அழைப்பதைவிட மின்வெட்டு மற்றும் மதுவிற்பனை அமைச்சர் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.

மதுவின் தீமைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மற்ற அனைவரையும் விட நன்றாக தெரியும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். மதுவின் தீமைகளை நன்றாக அறிந்திருந்தும் மதுவை விற்பதைவிட பெரிய பாவச்செயல் எதுவும் இருக்க முடியாது. எனவே, மதுவிலக்கு தொடர்பாக தமிழக மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் உடனடியாக மதுவிலக்கை அரசு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், பா.ம.க. தற்போது நடத்தும் வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x