Published : 18 Aug 2018 08:49 AM
Last Updated : 18 Aug 2018 08:49 AM
புதிய தலைமைச் செயலக கட்டு மானத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, அது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஆர்.ரகுபதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
‘எனக்கு ஒதுக்கப்பட்ட மிகப் பெரிய இமாலயப் பணியை மன சாட்சியுடன் நேர்மையாக விசாரித்து 2015-ம் ஆண்டே முடித்துவிட் டேன். காலதாமதத்துக்கு காரணம் உயர் நீதிமன்றம் தானே தவிர நானோ, இந்த ஆணையமோ, தமிழக அரசோ இல்லை’ என குற்றம் சாட்டியுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா கார், கம்ப்யூட்டரை அரசிடம் திருப்பி ஒப்படைத்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டுமானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்த தாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணை யம் அமைத்து அப்போதைய முதல் வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த விசாரணை ஆணையம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்யக் கோரியும், ஆணையத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக்கோரி தொடரப்பட்ட இடையீட்டு மனுக் களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த ஆக.3-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்படாத ரகுபதி ஆணையத் துக்கு ரூ.2.23 கோடியை தமிழக அரசு வீணாக செலவழித்துள்ளது. எனவே, நீதிபதி ரகுபதி ஆணையத் தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க தமிழக அரசு ஒரு வாரத் தில் நடவடிக்கை எடுக்க வேண் டும். அந்த ஆணையத்துக்கு வழங் கப்படும் நிதி, இதர சலுகைகள் உள்ளிட்ட செலவினங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நீதிபதி ரகுபதி ஆணையம் இதுவரை செய்த விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் 2 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும். அந்த ஆவணங்களின் மீது உரிய முகாந் திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர் கள் மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும். ரகுபதி ஆணையத்துக்காக வழங்கப்பட் டுள்ள பங்களா, அலுவலகத்தை காலி செய்து தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆணையங்களை அமைக்கும்போது தமிழக அரசு அதற்கான காலவரம்பையும் முன்கூட்டியே நிர்ணயிக்க வேண் டும். அதற்கு முன்பாக இதுபோன்ற ஆணையங்கள் தேவைதானா என்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையே, நீதிபதி ரகுபதி ஆணையத்தின் பதவிக்காலத்தை தமிழக அரசு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி ஆர்.ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நீதிபதி ஆர்.ரகுபதி கூறியதாவது:
உண்மையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தங்கராஜ்தான் முதலில் நியமிக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்ததால் அப் போதைய முதல்வர் ஜெயலலிதா எனது தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். புதிய தலைமைச் செயலகத்தின் கட்டு மானம், தரம், செலவினம் குறித்து பல்வேறு கோணங்களில், பல்வேறு துறை நிபுணர்கள் மூலமாக முறையாக விசாரணை நடத்தப்பட்டு ஆயிரம் பக்கங்களுக்குமேல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 110 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 24 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளேன்.
மேலும் இதுதொடர்பாக அப் போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகி யோருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தான் உயர் நீதிமன்றம் இந்த ஆணையத் துக்கு தடை விதித்தது. அந்த தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசா ரணைக்கு பட்டியலிடக் கோரி கடந்த 2015 முதல் ஆணையமும், தமிழக அரசும் பலமுறை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லாமல் போனது. இந்த தாமதத்துக்கு நானோ, ஆணையமோ, தமிழக அரசோ காரணம் கிடையாது. முழுக்க முழுக்க உயர் நீதிமன்ற தடை உத்தரவுதான் காரணம்.
எனக்கு ஒதுக்கப்பட்ட மிகப் பெரிய இமாலயப் பணியை மனசாட்சியுடன் நேர்மையாக விசாரித்து கடந்த 2015-ம் ஆண்டே முடித்துவிட்டேன். விசாரணை ஆணைய சட்டத்தின்படி எதிர் மனுதாரர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரிக்காமல் அறிக்கையை வெறுமனே சமர்ப் பித்துவிட முடியாது. இதில் பல் வேறு சட்டப் போராட்டம் உள்ளது. இந்த ஆணைய விசாரணைக்காக மாதத்தில் 13 நாட்களுக்கு ஒருநாள் விசாரணை ஊதியமாக ரூ.6 ஆயிரம்தான் பெற்றுள்ளேன். மவுலிவாக்கம் சம்பவம் குறித்து 45 நாட்களில் ஒரு ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது என்றால் அது நானாகத்தான் இருக்க முடியும். அதற்கு நான் ஊதியம்கூட பெறவில்லை.
கடந்த 2015-ம் ஆண்டு ஆணையத்துக்காக ஒதுக்கப்பட்ட 10 பேரில் 5 பேரை அவர் களின் துறைகளுக்கே திருப்பி அனுப்பியுள்ளேன். ஆணையத் துக்கென அலுவலகம் இல்லாமல் எப்படி விசாரணை நடத்த முடியும்? ஓய்வுபெற்ற நீதிபதிகளான எங்களுக்கும் சமூக பொறுப்புணர்வு உள்ளது என்பதை நிரூபிக்கவே எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனக்காக வழங் கப்பட்ட இன்னோவா கார், கம்ப் யூட்டர், பிரின்டர் ஆகியவற்றையும் எனது ஆணையச் செயலாளர் மூலமாக திருப்பி ஒப்படைத் துள்ளேன். இனிமேலும் இதில் தொடர விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT