Published : 18 Aug 2018 03:35 PM
Last Updated : 18 Aug 2018 03:35 PM
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 3 லட்சம் கனஅடி நீர் செல்வதால் அணைக்கரை பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதாலும், கர்நாடக அணைகள் நிரம்பி அதன் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்படுவதாலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் அமராவதி ஆறு மூலம் காவிரியில் கலந்து வருவதால் கடந்த நான்கு தினங்களாக அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் உபரி நீராகத் திருப்பி விடப்படுகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 33 ஊராட்சிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் தட்டுமால் என்ற கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் ஊருக்குள்ளும், வயல் பகுதிகளுக்கும் புகுந்தது. அதேபோல் பாபநாசம் அருகே பட்டுக்குடி கிராமத்தில் வாய்க்கால் வழியாக கொள்ளிடம் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. பின்னர் வெள்ளிக்கிழமை இரவு இந்த தண்ணீர் வடியத் தொடங்கிவிட்டது.
பாபநாசம் வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியில் உள்ள கூடலூர், பட்டுக்குடி ஆகிய இரு கிராமங்களில் வெள்ளிக்கிழமை இரவு 70 வீடுகளை கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கு வசித்த 110 பேரை புத்தூரில் உள்ள கிராம சேவை மையம், சமுதாயக் கூடம், தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள அணைக்கரையில் தண்ணீர் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடியதால் விநாயகம் தெருவில் 30 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 125 பேர் தங்கியுள்ளனர். இவர்களை வெள்ளிக்கிழமை இரவு வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு நேரில் சந்தித்து, வீடுகளைச் சூழ்ந்துள்ள நீர் வடியும் வரை முகாமில் பாதுகாப்பாக இருக்குமாறும், அதுவரை தேவையான உணவு, சுகாதாரம் உதவிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் 3 லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இதனால் அணைக்கரை பாலத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பேருந்து, லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதியிலிருந்து சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நீலத்தநல்லூர் - மதனத்தூர் வழியாகவும், மயிலாடுதுறை வழியாகவும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை காலை திருப்பனந்தாள் அருகே உத்திரை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை வலுவிழந்து காணப்பட்டதால் அங்கு மணல் மூட்டைகளையும், சவுக்கு மரக்கட்டளையும் கொண்டு கரையை பலப்படுத்தப்பட்டதால் கரை உடைப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, கும்பகோணம் உதவி ஆட்சியர் மா.பிரதீப்குமார் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT