Published : 20 Aug 2018 03:09 PM
Last Updated : 20 Aug 2018 03:09 PM
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.5 கோடியை கேரள வெள்ள நிவாரணத்துக்கு அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு புதுச்சேரி அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி தரப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரணத்துக்குத் தருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து நிவாரண உதவிகளை பெற்று கேரளத்துக்கு அனுப்புவதற்கு புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக புதுச்சேரியிலுள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுவரும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை கேரளாவிற்கு முறையாக அனுப்புவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் கிழக்கு கடற்கரை சாலை உள்ள மாநில அவசரகால சேவை மையத்தில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜஹான், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட ஆட்சியர், வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று நிவாரணப் பொருட்களை அனுப்புவது தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிகள் செய்வதற்காக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு அளிப்பதற்கு முடிவு செய்து கடிதம் அளித்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.5 கோடி நிதி கிடைக்கும். இதேபோல் பொதுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை வழங்க முன்வர வேண்டும். மாநில அரசின் நிதியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் குழுவுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், கூட்டுறவு, தன்னாட்சி ஊழியர்கள் மூலம் ரூ.7 க்ோடி நிவாரண நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT