Published : 31 Aug 2018 02:37 PM
Last Updated : 31 Aug 2018 02:37 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரத்து 525 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டில் 4வது முறையாக அணை நிரம்பியுள்ளது.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதமாகவே அதிகரித்து காணப்பட்டது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்தது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரத்து 712 கனஅடியிலிருந்து 13 ஆயிரத்து 901 கனஅடியாக குறைந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 525 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணை நீர்மட்டம் 120.04 அடியாகவும் நீர் கொள்ளளவு 95 .53 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 11 ஆயிரத்து 347 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் ஆணை இந்த ஆண்டில் 4வது முறையாக நிரம்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT