Published : 31 Aug 2018 03:51 PM
Last Updated : 31 Aug 2018 03:51 PM
போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு பெற்ற வழக்கில், மாவோயிஸ்ட் தம்பதியர் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கு வரும் செப்டம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மே 4-ம் தேதி தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஆர்.ரூபேஷ், அவரது மனைவி சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை, கியூ பிரிவு போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் தம்பதியரான ரூபேஷ், சைனா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்தபோது போலி ஆவணங்களை மோசடியாக பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருப்பூர் மாநகர வடக்கு போலீஸார் உட்பட 5 வழக்குகள் தம்பதியர் மீது பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறையில் இருந்ததால், பொறுப்பு நீதிபதி ஜமுனா முன்னிலையில் மாவோயிஸ்ட் தம்பதியர் ரூபேஷ் மற்றும் சைனா ஆகியோர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினர்.
ஷைனி பிணையில் இருப்பதால் தானாகவே நீதிமன்றத்துக்கு வந்தார். ரூபேஷை மட்டும் போலீஸார் பாதுகாப்புடன் நேற்று போலீஸார் அழைத்து வந்தனர். இதையடுத்து வழக்கை வரும் செப். 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ரூபேஷை போலீஸார் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் ஷைனி கூறியதாவது:
“என் மீது 17 வழக்குகளும், கணவர் ரூபேஷ் மீது 43 வழக்குகளையும் ஒருங்கிணைத்து நடத்த உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்க உள்ளோம். எனக்கு பிணை வழங்கப்பட்ட நிலையிலும் இருவேளையும் கியூ பிரிவு போலீஸார் அலுவலகத்துக்கு சென்று கையெழுத்து இட வேண்டியிருப்பதால் என்னால் வழக்கம் போல் மற்ற பணிகளை செய்ய முடியவில்லை.அரசுக்கு எதிராக புத்தகம் எழுதினால் அல்லது போராட்டம் நடத்தினால் துப்பாக்கிச்சூடு மற்றும் கைது என இந்தியா முழுவதும் தனிமனித உரிமை கேள்விக்குறி ஆகி உள்ளது” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT