Published : 07 Aug 2018 03:38 PM
Last Updated : 07 Aug 2018 03:38 PM
இந்தியாவில் நிறுத்தப்பட்ட தந்தி சேவைக்கு 2 ஆண்டுகளாக செலவு செய்த மதுரை மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும், மறுபடியும் தணிக்கை செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்தவர் கே.ஹக்கீம். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகளையும், வெளியிடப்படாத அரிய தகவல்களையும் அவ்வப்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெற்று வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் கடனில் மூழ்கும் தகவலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் திங்கள்கிழமை ஹக்கீம் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மதுரை ஆட்சியர் கொ.வீரராகராவை சந்தித்து இந்தியாவில் நிறுத்தப்பட்ட தந்தி சேவைக்கு 2 ஆண்டுகளாக செலவு செய்த மதுரை மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும், மறுபடியும் தணிக்கை செய்யக் கோரியும் முறையிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹக்கீம் கூறுகையில், “மதுரை மாநகராட்சி தாமாகவே முன் வந்து கடந்த 2014-15, 2015-16, 2016-17 ஆகிய நிதியாண்டின் வரவு-செலவு அறிக்கையினை தமது இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில், 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரையான 2 ஆண்டுகள் செலவுகளை விட, 2016-17 ஆம் ஆண்டு செலவுகள் கூடுதலாக உள்ளன. 2013-ம் ஆண்டே தந்தி சேவை முறை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், 2015-2016 நிதியாண்டில் அஞ்சல் மற்றும் தந்தி சேவைக்கு 4 லட்சத்து 44 ஆயிரத்து 85 ரூபாயும், 2016-17 நிதியாண்டில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 142 ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட தந்தி சேவைக்கு 2 ஆண்டுகளாக மாநகராட்சி செலவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி ஊழியர்களின் மருத்துவ செலவுக்கு 31 லட்சத்து 65 ஆயிரத்து 405 ரூபாய் செலவு செய்துள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் வேறு செலவு என்று 16 லட்சத்து 27 ஆயிரத்து 339 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் பயணம் மற்றும் சீருடை செலவு என 37 லட்சத்து 67 ஆயிரத்து 22 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
அச்சு மற்றும் அலுவலக உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 604 ரூபாய் செலவாகியுள்ளது. கணிப்பொறி இயக்க 22 லட்சத்து 21 ஆயிரத்து 611 ரூபாய் செலவாகியுள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருந்து வாங்க மட்டும் 2016-17 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 13 லட்சத்து 38 ஆயிரத்து 528 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதே காரணத்திற்கு 2015-16 நிதியாண்டில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. ஒரே ஆண்டில் எப்படி 4 மடங்கு கூடுதலாக மருந்துகள் வாங்கப்பட்டன?
2016-17 ஆம் ஆண்டு மாநகராட்சிக்குட்பட்ட தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் மின் கட்டணத்திற்கு 11 கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 291 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதே 2015-16 ஆம் ஆண்டுக்கு 5 கோடியே 88 லட்சத்து 8 ஆயிரத்து 747 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் புகார் மனு அளித்துள்ளேன். மனுவில் 2016-17 ஆம் ஆண்டு செலவு கணக்குகளை மறுதணிக்கை செய்ய வேண்டும்” என்றார்.
ஹக்கீம் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலர்களை அழைத்து உடனடியாக இம்மனு குறித்த தகவல்களை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT