Published : 25 Aug 2018 02:26 PM
Last Updated : 25 Aug 2018 02:26 PM

வீட்டு ‘கேட்டில்’ சிக்கிக்கொண்ட குட்டி; மீட்க பாசப் போராட்டம் நடத்திய தாய் கரடி: கோத்தகிரியில் நெகிழ்ச்சி சம்பவம்

கோத்தகிரியில் வீட்டின் நுழைவு வாயிலில் சிக்கிக்கொண்ட தன் குட்டியை மீட்க தாய் கரடி பாசப்போராட்டம் நடத்தியது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.

நீலகிரி மாவட்டத்தில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் குடியிருப்பு அருகிலேயே அவை வலம் வர ஆரம்பித்து விட்டன. இன்று (சனிக்கிழமை) காலை கோத்தகிரி - டானிங்டன் சாலையில் ரைஃபில் ரேஞ்ச் என்ற இடத்தில் சிலம்பரசன் என்பவரது வீட்டின் பின் பகுதிக்கு குட்டிகளுடன் இரண்டு கரடிகள் வந்தன.

பீன்ஸ் காய்களை உண்ட கரடிகள் இரும்பு கேட்டின் வழியாக வந்த போது பெரிய கரடிகள் தாவி குதித்து வெளியே சென்று விட்டது. ஒரு குட்டிக் கரடி மட்டும் அவசர கதியில் கம்பிக்குள் நுழைந்த போது தலை சிக்கி கொண்டது.

குட்டி வலி தாங்காமல் சத்தமிட்டதும் தாய் கரடி பதறி அடித்து வந்து குட்டியை காப்பாற்ற முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. குட்டி கதறுவதை பார்த்து தாய்க் கரடியும் சத்தமிட்டு அழுதது. அந்த பகுதி மக்கள் அருகில் செல்ல முடியாமல் இந்த பாசப் போராட்டத்தைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு துறையினர் மோகன் தலைமையில் அங்கு சென்று கரடிகளை விரட்டினர். தாய் கரடி மட்டும் சற்று தூரத்தில் உள்ள புதரில் சென்று மறைந்தபடியே காத்திருந்தது. தீயணைப்பு வீரர்கள்,  ஆக்ஸா பிளேட் உதவியுடன் கேட்டின் கம்பியை அறுத்து குட்டியை மீட்டனர்.

அதற்காகவே, காத்திருந்த குட்டி கரடி துள்ளி குதித்து அருகில் புதரில் மறைந்திருந்த தாயுடன் போய் சேர்ந்தது. பின்னர் தனது குட்டியுடன், தாய் கரடி அந்த இடத்தை விட்டு அகன்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x