Last Updated : 01 Aug, 2018 11:36 AM

 

Published : 01 Aug 2018 11:36 AM
Last Updated : 01 Aug 2018 11:36 AM

பதவியேற்று ஓராண்டுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்களுக்கு அனுமதி

 ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்து ஓராண்டுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் முதல்முறையாக இன்று அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி அரசு பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும் நியமன எம்எல்ஏக்களை நியமிக்காமல் இருந்தது. மத்திய பாஜகவின் உத்தரவுப்படிதான் ஆளுநர் கிரண்பேடி தாமாகவே 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார். அப்பட்டியலில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், பாஜகவைச் சேர்ந்த தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தனர். உள்துறையானது கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி உத்தரவை பிறப்பித்தது.

ஜூலை 2017-ம் ஆண்டு 4-ம் தேதி இரவே ராஜ்நிவாஸுக்கு 3 எம்எல்ஏக்களும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் யாரும் ராஜ்நிவாஸுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கதவை மூடி பதவியேற்பு நிகழ்வு நடந்தது.

கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தவுடன், அவர்கள் மூன்று பேரும் சட்டப்பேரவை இருக்கை, பேரவை வளாகத்தில் அலுவலகம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கான சலுகை வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு கடிதம் அனுப்பினார்.

அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. மத்திய அரசு, நியமன எம்எல்ஏக்காளாக மூவரை நியமித்தது செல்லும் என்று தீர்ப்பு வந்தது. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல்முறையீட்டை எம்எல்ஏ லட்சுமிநாராயணன் செய்தார். அவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரவைக்கூட்டத்துக்கு இருமுறை வந்த நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்கவில்லை.

தற்போது உச்ச நீதிமன்றம், பேரவையில் நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் அனுமதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆளுநரும் இதை செயல்படுத்த அறிவுறுத்தி வந்தார்.

நெருக்கடி அதிகரித்த சூழலில் பேரவைக்குள் நியமன எம்எல்ஏக்கள் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனர். நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட பாஜக மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் காலையில் பேரவைக்கு வந்தனர். சாமிநாதன் தாமரைப்பூவை கையில் வைத்திருந்தார். மூவரும் பேரவையின் படிக்கட்டை வணங்கி உள்ளே வந்தனர்.

 

பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி ஆகியோரை சந்தித்தனர். அதையடுத்து பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

நிதி மசோதா நிறைவேற்றம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. பேரவை நிகழ்வுகள் 23 நிமிடங்களில் நிறைவடைந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதி ஒதுக்க மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெற்ற விவாதம்:

லட்சுமி நாராயணன் (காங்) - புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மத்திய அரசானது மாநில அரசு பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்துள்ளனர். அவர்களை பேரவைக்குள் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது முடியும் வரை அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக உரிமை மீறல் கடிதம் தந்துள்ளேன்.

அரசு கொறடா அனந்தராமன்: குடியரசு தலைவர் தேர்தலில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 55-ன் கீழ் நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் வாக்குரிமை இல்லை. அதனால் மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கும் இந்த சட்டப்பேரவையில் எந்த ஒரு வாக்கெடுப்பிலும் வாக்களிக்கும் உரிமை இல்லை. இத்தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்.

சபாநாயகர்- உச்ச நீதிமன்ற எதிர்பார்ப்புக்கு இணங்க 3 பேரையும் பேரவையின் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்துள்ளேன். அதுவரை மட்டுமே அனுமதி பொருந்தும். உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் 11.9. 2018-க்கு பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தீர்மானத்தை பெரும்பாலான உறுப்பினர்கள் ஆம் என்று தெரிவித்ததால் நிறைவேறியதாக தெரிவித்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதிக்காததால் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x