Published : 21 Aug 2018 08:25 AM
Last Updated : 21 Aug 2018 08:25 AM
மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை சேமிக்க வழியில்லாததால் கடந்த 10 நாட்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஏறத்தாழ 90 டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று கலந்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த அதிக மழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் ஜூலை மாதத்திலேயே நிரம்பின. இதைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரம் முதல் கர்நாடக அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பியது. காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் 11-ம் தேதியில் இருந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததைத் தொடர்ந்து அணையில் இருந்து விநாடிக்கு 77,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆக.12-ம் தேதி விநாடிக்கு 1,29,000 கனஅடியும், 13-ம் தேதி விநாடிக்கு 87,000 கனஅடியும், 14-ம் தேதி விநாடிக்கு 86,000 கனஅடியும், 15-ம்
தேதி விநாடிக்கு 1,24,000 கனஅடியும், 16-ம் தேதி விநாடிக்கு 1,65,000 கனஅடியும், 17-ம் தேதி விநாடிக்கு 1,90,000 கனஅடியும், 18-ம் தேதி விநாடிக்கு 2,32,000 கனஅடியும், 19-ம் தேதி விநாடிக்கு 1,60,000 கனஅடியும் திறக்கப்பட்டது.
இதில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் அதிகபட்சமாக விநாடிக்கு 35,000 முதல் 65,000 கனஅடி வரையிலும் மீதமுள்ள அனைத்து தண்ணீரும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதில், கொள்ளிடம் ஆற்றில் 10 நாட்களாக குறைந்தபட்சமாக விநாடிக்கு 35,000 முதல் அதிகபட்சமாக விநாடிக்கு 2,50,000 கனஅடி வரை தண்ணீர் சென்று வங்கக் கடலில் கலந்துள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் விடப்படும் உபரி தண்ணீரை சேமிக்க பல இடங்களில் தடுப்பணைகளை கட்ட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், உபரி
யாக வந்த தண்ணீர் ஏறத்தாழ 90 டிஎம்சி அளவுக்கு கடலில் சென்று கலந்துள்ளது. இது, மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவுக்கு சமமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன் கூறியது: இது எதிர்பார்க்காமல் வந்த தண்ணீர் என்றாலும், இதன் மூலம் வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. மற்ற பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை. இதற்கு என்ன காரணம். இந்த விஷயத்தில் அரசு திட்டமிட்டு செயல்படுகிறதா அல்லது அதிகாரிகளுக்கு புரியவில்லையா என்பது தெரியவில்லை.
ஓராண்டுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கான, மேட்டூர் அணை அளவுக்கு சமமான தண்ணீர், கடந்த 10 நாட்களில் கடலில் கலந்துள்ளது துரதிஷ்டவசமானது.
இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தண்ணீர் வடிந்தவுடன் எங்கெங்கு தடுப்பணைகள், கதவணைகள் கட்டலாம் என்பது குறித்து விவசாயிகள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஓய்வுபெற்ற பொறியாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, பரிந்துரைகளை பெற்று, அதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்து, விரைந்து அந்த பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முக்கொம்பு முதல் அணைக்கரை வரையில் 10 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டலாம்.
இனி வருங்காலங்களில் இதுபோன்று கடலுக்குச் செல்லும் நீரில் மூன்றில் ஒருபகுதியையாவது சேமிக்க வழி ஏற்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழகங்கம் என்ற பொன்னேரி, சுத்தமல்லி ஏரி, கண்டராதித்தம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகளை முழுமையாக தூர்வாரினால் தலா 2 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை சேமிக்கலாம்.
இதற்கான திட்டமிடுதல்களை அரசு செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும் என்றார்.
இதற்கு முன்பு 2005-ம் ஆண்டில் 145 டிஎம்சி தண்ணீரும், 2013-ம் ஆண்டில் 27 டிஎம்சி தண்ணீரும் கடலில் வீணாக கலந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT