Published : 08 Aug 2018 01:20 PM
Last Updated : 08 Aug 2018 01:20 PM

மெரினா அண்ணா சதுக்கம் வேகமாக தயாராகிறது: 4:00 மணிக்கு இறுதி ஊர்வலம்

கருணாநிதிக்கு சமாதி அமைக்கும் பணியில் மெரினாவில் பள்ளம் தோண்டும் பணி வேகமாக நடக்கிறது. அனைத்துப் பணிகளும் முடிவடையும் நிலையில் 4 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்க உள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் மெரினா கடற்கரையில் நடக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நடக்கவேண்டிய உடல் அடக்கத்துக்கான பணிகள் வேக வேகமாக நடக்கிறது. திமுகவின் முக்கிய தலைவர்களான துரைமுருகன், எ.வ.வேலு, ஐ.பெரிய சாமி உள்ளிட்டோர் நேரடியாக அண்ணா சமாதியில் அமர்ந்து சமாதி அமைக்கும் பணியை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.

அவரது உடல் அடக்கம் நடக்கும் இடத்தை திமுக தலைவர்கள் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் சேர்ந்து ஆலோசித்து தேர்வு செய்தனர். அண்ணா சமாதி அமைந்த இடத்துக்கு பின்புறம் சமாதி அமைகிறது.

முதல்கட்டமாக இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பொதுப்பணித்துறை ஊழியர்கள் களம் இறக்கப்பட்டு வேக வேகமாக பணிகள் நடைப்பெற்று வருகிறது. 12-க்கு 7 அடி அகலத்தில் சமாதி அமைக்கும் பீடம் தயாராக உள்ளது. அதற்கான செங்கல், மணல், சிமெண்ட் மூட்டைகள், ஆட்கள் வந்து இறங்கிவிட்டனர்.

மாலை 4-30 மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வேலைகள் வேகவேகமாக நடந்து வருகிறது. மாலை சமாதியின் வேலை முடிந்தவுடன் மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

அவரது இறுதி ஊர்வலத்துக்கான பாதை அண்ணா சிலை வழியாக வந்து வாலாஜா சாலையில் திரும்பி கடற்கரை காமராஜர் சாலை வழியாக அண்ணா சதுக்கத்தை அடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x