Published : 02 Aug 2018 09:56 AM
Last Updated : 02 Aug 2018 09:56 AM

சென்னை குடிநீர் வாரியத்தில் குழாய் உடைந்து நீர் வெளியேறுவதை தடுக்கும் திட்டம் இல்லை: பற்றாக்குறை நிலவும் நிலையில் வீணாகும் அவலம்

சென்னை குடிநீர் வாரிய குடிநீர் குழாய்கள் உடைந்தால், அவற்றிலிருந்து குடிநீர் வெளியேறுவதை தடுக்கும் திட்டம் இல்லாததால்,  பல லட்சம் லிட்டர் குடிநீர்  வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில் இருந்து சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கும் நடைமுறை நூறாண்டு பழமை வாய்ந்தது. 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தற்போது சென்னை முழுவதும் 6,500 கிமீ நீளத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் 7 லட்சம் இணைப்புகள் வழியாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது பற்றாக்குறை நிலவுவதால், வழக்கமாக நாளொன்றுக்கு விநியோகிக்கப்படும் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் 650 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் போதிய அழுத்தம் இல்லாத பகுதிகளில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

குடிநீர் விநியோகத்தில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ள நிலையில், குழாய்கள் உடைந்து குடிநீர் வெளியேறும்போது, அதை  உடனே தடுப்பதில் தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட 36-வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக வந்த புகாரின்பேரில் அண்மையில் அங்கு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் இருந்த சென்னை குடிநீர் வாரியத்தின் 200 மிமீ விட்டம் கொண்ட குடிநீர் குழாய் சில தினங்களுக்கு முன்பு உடைந்தது. அதனால் அன்று குடிநீர் விநியோகிக்கும் நேரமான காலை 6 முதல் 8 மணி வரை அந்த குழாயில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறியது. அந்த குடிநீர் அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

 சம்பவ தினத்துக்கு முந்தைய இரவு இப்பகுதியில் லேசான மழை பெய்தது. அடுத்த நாள் காலை வெளியில் வந்து பார்த்தோபோது தெருக்களில் தண்ணீர் பெருமளவு  தேங்கியிருந்தது. விசாரித்தபோது, குடிநீர் வாரிய குழாய் உடைந்து, அதிலிருந்து வெளியேறிய நீர் தேங்கியது தெரியவந்தது.குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில், விநியோகத்தை நிறுத்தாததால் பல லட்சம் லிட்டர் நீர் வெளியேறி வீணாகியுள்ளது. அங்கிருந்த குடிநீர் வாரிய அதிகாரிகள், நீர் வெளியேறுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “குடிநீர் குழாய் உடைந்ததற்காக விநியோகத்தை நிறுத்தமுடியாது. அது மற்ற பொதுமக்களை பாதிக்கும். வழக்கமாக இதுபோன்று குழாய் உடைந்தால், விநியோக நேரம் வரை குடிநீர் வெளியேறும். பின்னர் நின்றுவிடும். அதன் பின்னர் குழாயை சீரமைக்கும் பணியை தொடங்குவோம்” என்றனர்.

குழாய்கள் உடைந்தால், குடிநீர் வெளியேறி வீணாவதை தடுக்க உரிய நடைமுறை உருவாக்கப்படுமா என குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, குழாய்கள் உடைந்த இடத்தில் சீரமைத்து, குடிநீர் வெளியேறுவதை தடுத்துவிட்டோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x